2014-06-21 15:28:35

சிரியா நாட்டுப் புலம்பெயர்வோர்க்கு அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஆயர்கள்


ஜூன்,21,2014. மத்திய கிழக்கில், சிரியா நாட்டுப் புலம்பெயர்வோர் எதிர்நோக்கும் நெருக்கடி நிலை ஒரு மனிதாபிமானப் பேரிடர் என்று சொல்லி, அம்மக்களுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆற்றிவரும் மனிதாபிமான உதவிகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அரசை விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக புலம்பெயர்வோர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுத் தலைவர் ஆயர் Eusebio Elizondo அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்வோரில் மிகவும் வறியவர்க்கு மீள்குடியேற்றம் உட்பட பல நிவாரணப்பணிகளை அமெரிக்க அரசு செய்துவந்தாலும் அப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
மேலும், மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரின் நிலைமையும், புலம்பெயர்வோர் நிலைமையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஆயர் Elizondo, தரமான வாழ்வுக்காக இந்நாட்டுக்கு வரும் இச்சிறாரை பாதுகாப்பு வழங்கும் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை முப்பது இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என, ஐ.நா. கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.