2014-06-21 15:27:41

கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை


ஜூன்,21,2014. சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை நோக்கிய பயணம், நம்மை அன்பு செய்கின்ற, நம்மை அறிந்திருக்கின்ற, நம் பாவங்களை மன்னிக்கின்ற இறைவனோடு சந்திப்பு ஏற்படுத்துவதில் அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று இத்தாலியக் கைதிகளிடம் கூறினார்.
இச்சனிக்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு தென் இத்தாலியின் கலாபிரியா மாநிலத்துக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, முதலில் அம்மாநிலத்தின் Castrovillari மாவட்டச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகள் மற்றும் அலுவலகர்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
சிறையில் இருப்பவர்களின் அடிப்படை மனித மாண்புப்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நியதி இருக்கும்வேளை, கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகளும் சிறை அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த நோக்கம் நிறைவேற்றப்படாதபோது சிறைத் தண்டனை வெறும் தண்டனையாகவும், பழிக்குப்பழி வாங்குவதாக மட்டுமே இருக்கும், இது தனிநபரையும் சமூகத்தையும் பாதிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைவன் நம்மை இந்த வழியில் நடத்தவில்லை என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவதற்குச் செல்லும்போது இறைவன் நம்மை மன்னிக்கிறார் மற்றும் நாம் அவரோடு செல்வதற்கு நம்மை அழைக்கிறார் என்றும் கூறினார்.
நாம் பலவீனமானவர்கள் என்பதை இறைவன் நினைவுபடுத்துகிறார், எனவே ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறச் செல்வதற்கு சோர்வடையக் கூடாது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இச்சந்திப்பின் இறுதியில் கைதிகளின் குடும்பங்கள் இறைவனின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்குமாறு செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.