2014-06-21 15:28:55

இந்தியா திரும்ப இயலாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் : ஆம்னெஸ்டி


ஜூன்,21,2014. ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது கடவுட்சீட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் நிறுவனம் கூறியுள்ளது.
ராக் நாட்டில், கட்டடப் பணிகள் மற்றும் கட்டமைப்புத் துறைகளில், இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே, சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக நகரமான மொசுலை கைப்பற்றிய பயங்கரவாதிகள், அடுத்து திக்ரித் நகரையும் கைப்பற்றினர். கடும் போராட்டத்திற்கு பிறகு, திக்ரித் நகரத்தை அவர்களிடமிருந்து மீட்ட இராணுவம், மறுநாளே, மீண்டும் திக்ரித் நகரத்தை, பயங்கரவாதிகளிடம் பறிகொடுத்தது. பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த மருத்துவமனையில், இந்தியாவைச் சேர்ந்த 46 தாதியர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, எங்களைப்போன்ற தொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.