2014-06-21 15:28:42

ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு


ஜூன்,21,2014. அனைத்துலக புலம்பெயர்வோர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்படவும், இப்போரினால் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
போர்களாலும், அடக்குமுறைகளாலும், மனித உரிமை மீறல்களாலும் நாடுகளைவிட்டு வெளியேறியுள்ள ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களின் நெருக்கடியான நிலைகளை நினைவுகூருமாறும் இச்செய்தியில் கேட்டுள்ளார் பான் கி மூன்.
உலகில் புலம்பெயர்ந்துள்ளவர்களில் 86 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் எனவும், இவ்வெண்ணிக்கை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 70 விழுக்காடாக இருந்தது எனவும் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.
உலகில் போர்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டுக்குள்ளே 3 கோடியே 30 இலட்சம் பேரும், அண்டை நாடுகளில் 1 கோடியே 67 இலட்சம் பேரும் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் புதிதாகப் புலம்பெயர்ந்தனர். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு குடும்பம் வீதம் புலம்பெயர்ந்து வருகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.