2014-06-20 16:15:40

முதல் நூற்றாண்டுகளைவிட இக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவ மறைசாட்சிகள், திருத்தந்தை பிரான்சிஸ் கவலை


ஜூன்,20,2014. சமய சுதந்திரம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 200 பிரிதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமய அடக்குமுறைகளால் இன்று உலகெங்கும் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் தனக்கு மிகுந்த வேதனை தருகின்றது என்று தெரிவித்தார்.
இன்றைய உலகில், சமய சுதந்திரத்துக்கு ஆதரவாக எண்ணற்ற கருத்துக்கள் வெளிவந்தாலும், சமய அடக்குமுறையும், அலைக்கழிப்பும், ஏன் கொலைகளும்கூட இன்று உலகெங்கும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இந்தச் செயல்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான சமய அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன என்று கவலை தெரிவித்தார்.
“அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில் சமய சுதந்திரம் : உலகில் இடம்பெறும் மோதல்களின் தாக்கங்கள்” என்ற தலைப்பில், உரோம் நகரில் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரிதிநிதிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இக்காலத்தில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள், திருஅவையின் முதல் நூற்றாண்டுகளில் நடந்ததைவிட அதிகக் கொடூரமாய் இருக்கின்றன என்றும், அந்தச் சகாப்தத்தைவிட இக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித ஜான் பல்கலைக்கழகமும், உரோம் LUMSA கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.