2014-06-20 16:15:48

போதைப்பொருள்களைத் தடைசெய்யும் முயற்சியில் “பொழுதுபோக்குப் போதைப்பொருள்களை” அங்கீகரிப்பது பலன்தராது, திருத்தந்தை எச்சரிக்கை


ஜூன்,20,2014. சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு, “பொழுதுபோக்குப் போதைப்பொருள்கள்” என்ற பெயரில் போதைப்பொருள்களைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் சட்டத்தில் விழுந்துள்ள ஓட்டை என்றும், அம்முயற்சி தோல்வியையே தழுவும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் வணிகத்தை ஒழிக்க முயற்சிக்கும் பல நாடுகளைச் சேர்ந்த குழுவினர் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 450 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்சனை போதைப்பொருள்களால் தீர்க்கப்பட முடியாது என்பதை, தான் தெளிவான வார்த்தைகளால் சொல்ல விரும்புவதாகப் பேசிய திருத்தந்தை, வாழ்வுக்கும், அன்பு செய்வதற்கும், பிறர்மீது அக்கறை காட்டுவதற்கும், கல்வி வாய்ப்புக்கும், வேலைவாய்ப்புக்களை பெருமளவாக வழங்குவதற்கும் இசைவு தெரிவிக்கும்போது, சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள் வணிகம் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறினார்.
திருஅவை, இயேசுவின் ஆணைக்குப் பணிந்து, துன்புறுவோர், பசித்திருப்போர், கைதிகள், போதைப்பொருள்களுக்கு அடிமைகளாக இருப்போர் ஆகியோரைக் கைவிடாமல், புத்துயிர் ஊட்டும் அன்புடன் அவர்களைச் சந்தித்து உதவுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆசிய நாடுகள் உட்பட 129 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
அமெரிக்க ஐக்கிய நாடு, உருகுவாய் உட்பட பல நாடுகளில் பொழுதுபோக்குப் போதைப்பொருள்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.