2014-06-20 16:16:27

கோதுமை உற்பத்தியை உயர்த்திய இந்திய அறிவியலாளருக்கு உலக உணவு விருது


ஜூன்,20,2014. இந்திய தாவரவியல் அறிவியலாளர் சஞ்சய இராஜாராம்(Sanjaya Rajaram) அவர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலக உணவு விருது அறக்கட்டளை நிறுவனர் Kenneth M. Quinn, இராஜாராம் அவர்கள் கோதுமை உற்பத்தியைப் பெருக்குவதில் மிகச் சிறப்பாக பணியாற்றுவதைக் கவுரவிக்கும் நோக்கத்தில் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இராஜாராம் அவர்கள், உலக கோதுமை உற்பத்தியை பசுமைப்புரட்சி மூலம் 20 கோடி டன்களுக்கு மேலாக உயர்த்தியமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான பரிசுத் தொகை 25 இலட்சம் அமெரிக்க டாலர்களாகும்.
இராஜாராம் அவர்கள், குளிர்காலம் மற்றும் கோடைகாலத்துக்கு ஏற்ற ஒட்டுவகை கோதுமை இரகங்களைக் கண்டுபிடித்தார். இவ்வகைக் கோதுமை அதிக அளவு மகசூல் கொடுக்கக்கூடியவை.
மொத்தம் 480க்கும் அதிகமான அதிக மகசூல் தரும் கோதுமை இரகங்களை இராஜாராம் கண்டறிந்தார். இந்தக் கோதுமை இரகங்கள் 51 நாடுகளில் சிறு மற்றும் பெரு விவசாயிகளால் பெரிதும் பயிர் செய்யப்படுகின்றன. உலகம் முழுதும் சுமார் 6 கோடி ஹெக்டேர் வயல்களில் இவரது கோதுமை இரகங்கள் பயிர் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த இராஜாராம், ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது மெக்ஸிகோவில் வாழ்ந்து வருகிறார்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.