2014-06-19 15:50:28

வலி நீக்கும் மருந்துகளில் போதைப்பொருள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


ஜூன்,19,2014. கனடாவில் வலி நீக்கும் மருந்துகள் உயிரைக் கொல்லும் பொருளாக மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள McGill பல்கலைக்கழகம் வலி நிவாரணிகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து மருந்தியல் துறை பேராசிரியர் Nicholas King அவர்கள், தனது குழுவினருடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
கடந்த இருபது ஆண்டுகளில் வலி நீக்கும் மருந்துகளால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதற்கு காரணம், நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க அளிக்கப்படும் வலி நீக்கும் மருந்துகளில் ஹெராயின் மற்றும் கொக்கெய்ன் ஆகிய இரண்டு போதை மருந்துகள் கலந்துள்ளன என்று பேராசிரியர் Nicholas King அவர்கள் கூறினார்.
நீண்ட காலம் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உடல்நிலை பாதிப்படைவதாகவும், அதுவே காலப்போக்கில் உயிர்க்கொல்லிகளாக மாறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், இது போன்ற போதை மருந்து கலந்த வலி நீக்கும் மருந்துகளை சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 16,000த்திற்கும் அதிகம் என்றும், இறந்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்திலும் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
தற்போதைய இந்த ஆய்வு முடிவை மற்ற நாடுகள் எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நல்லது என பேராசிரியர் Nicholas King அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : mcgill.ca








All the contents on this site are copyrighted ©.