2014-06-19 14:18:39

புனிதரும் மனிதரே : மகனால் கொலைசெய்யப்பட்ட புனிதத் தாய் (Blessed Margaret Ball)


16ம் நூற்றாண்டில் Margaret Bermingham என்பவரது குடும்பம் இங்கிலாந்திலிருந்து குடிபெயர்ந்து அயர்லாந்தில் வாழ்ந்துவந்தது. இக்குடும்பம் அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தது. 1553ம் ஆண்டில் டப்லின் மேயரான பர்த்தலோமேயோ பால் என்பவரை மணந்தார் 16 வயது மார்கிரேட். Dodder ஆற்றில் பாலம் கட்டி அதனை நிர்வாகம் செய்யும் அளவுக்கு மேயர் பால் அவர்களின் குடும்பம் செல்வம் மிகுந்திருந்தது. இன்றும் அந்தப் பாலம், பால்பாலம் என்றே அழைக்கப்படுகின்றது. பால் தம்பதியருக்கு பிறந்த பத்துக் குழந்தைகளில் ஐந்து குழந்தைகளே உயிர் பிழைத்தனர். 1558ம் ஆண்டில் அரசி முதலாம் எலிசபெத் புரோட்டஸ்டான்ட் புதிய மதக்கோட்பாடுகளைத் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் புகுத்தினார். இதனால் 1570ம் ஆண்டில் திருத்தந்தை, இந்த அரசியை கத்தோலிக்கத் திருஅவையைவிட்டுப் புறம்பாக்கினார். இதனால் அப்பகுதியில் மதக்கலவரம் வெடித்தது. அச்சமயத்தில் டப்லினைக் கடந்து சென்ற ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்கினார் மேயர் பால். தனது தந்தையின் வழியைப் பின்பற்றி அவர்களின் மூத்த மகன் வால்ட்டர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, புதிய மதத்தைப் பின்பற்றினார். இதற்கு அவரின் தாய் மார்கிரேட் எதிர்ப்பு தெரிவித்து அவரை மனம்மாற்ற முயற்சித்தார். ஆனால், 1580ம் ஆண்டில் டப்லின் மேயராகப் பதவியில் அமர்ந்த வால்ட்டர், தனது தாயையும் அவரது ஆன்மீக வழிகாட்டியான அருள்பணியாளரையும் கைது செய்து, டப்லின் அரண்மனையில் இருட்டான சிறைக்கிடங்கில் அடைத்தார். தாய் கைதுசெய்யப்பட்டதை குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தாலும் வால்ட்டர் தனது நடவடிக்கையில் உறுதியாக இருந்து தனது தாய் கொல்லப்பட வேண்டுமென அறிவித்தார். ஆனால் தாய் மார்கிரேட் தனது கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலித்தால் உயிர் பிழைக்கலாம் என்றும் சொன்னார். கைம்பெண்ணான மார்கிரேட் தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். தனது தாயின் விடுதலைக்காக முயற்சித்த தனது தம்பி நிக்கோலாசை பதவியிலிருந்து இறக்கினார் வால்ட்டர். பக்கவாத நோயால் தாக்கப்பட்டிருந்த தாய் மார்கிரேட் மூன்று ஆண்டுகள் கடும்பசி, கடுங்குளிர் போன்றவற்றால் இருளான கிடங்கில் துன்புற்று தனது 69 வது வயதில் 1584ம் ஆண்டு இறந்தார். மேலும், இவரது பேத்தியின் கணவரும், டப்லின் நகர் மேயருமான Francis Taylor என்பவரும் இதே காரணத்திற்காக டப்லின் அரண்மனையில் 1596ம் ஆண்டில் மறைசாட்சியாக இறந்தார். 1992ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், மார்கிரேட் உட்பட 17 அயர்லாந்து மறைசாட்சிகளை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தினார். முத்திப்பேறுபெற்ற மார்கிரேட் பால் அவர்களின் விழா ஜூன் 20.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.