2014-06-19 15:47:41

பிரித்தானியாவில், ஜூன் 16 முதல், 22 முடிய புலம்பெயர்ந்தோர் வாரம்


ஜூன்,19,2014. ஜூன் 20, இவ்வேள்ளியன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி, பிரித்தானியாவில், ஜூன் 16 முதல், 22 முடிய புலம்பெயர்ந்தோர் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்தோரைக் குறித்து ஊடகங்கள் வெளியிடும் வெறுப்புச் செய்திகளால் சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த ஒரு சமுதாய நீதி அமைப்பினரால் 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் வாரம் என்ற முயற்சி, இவ்வாண்டு, புலம்பெயர்தலால் பாதிக்கப்படும் குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை மையப்படுத்தி புலம்பெயர்ந்தோர் வாரத்தைக் கடைபிடிக்கிறது.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றும் JRS எனப்படும் இயேசு சபை அமைப்பு, இந்த முயற்சியையொட்டி, "வந்து பாருங்கள்" என்ற தலைப்பில் ஒரு புகைப்படக் கண்காட்சியை உருவாக்கியுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர் கண்ணோட்டத்தில் பதிவான புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகள், புகைப்படங்களாக வெளிவந்துள்ளன என்று JRS அமைப்பினர் கூறியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் வாரத்தைத் தொடர்ந்து, ஜூன் 27 முதல், ஜூலை 5ம் தேதி முடிய இந்தக் கண்காட்சி இலண்டன் மாநகரில் Lumen Gallery என்ற மையத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று ICN செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.