2014-06-18 15:59:46

புனிதரும் மனிதரே : தந்தையின் வன்செயலால் மனம் மாறியவர்(St.Romuald)


ஆடம்பரமும் அலங்காரமுமே வாழ்வு என்று, தனது இளமையை அனுபவித்துக் கொண்டிருந்தார் அந்த செல்வந்த வீட்டு இத்தாலிய இளைஞர் ஒருவர். அந்த இளைஞர், சமுதாயத்தில் மதிப்புடன் வாழ்ந்துவந்த தனது குடும்பத்துக்குத் தனது தாறுமாறான வாழ்வால் களங்கத்தையும் ஏற்படுத்தி வந்தார். ஆனால் ஒரு நாள், குடும்பச் சொத்து தகராறு காரணமாக, தனது தந்தை தனது உறவினர் ஒருவரைக் கொலை செய்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மன நிம்மதியை இழந்து, தனது ஊருக்குப் பக்கத்திலிருந்த, Classeயின் புனித அப்போலினியார் பசிலிக்காவில் தஞ்சம் அடைந்தார் அந்த இளைஞர். அப்போது அந்த இளைஞருக்கு வயது இருபது. அதன் பின்னர் அந்த இளைஞரின் வாழ்வு முற்றிலும் இறைமயமானது. இந்த இளைஞர்தான் புனித ரோமுவால்ட். இத்தாலியின் ரவேன்னா நகரில் கி.பி.951ம் ஆண்டில் பிறந்த ரோமுவால்ட், புனித அப்போலினியார் ஆதீனத்தில் துறவியாகச் சேர்ந்தார். தனது இளமைகால சீர்குலைந்த வாழ்வுக்கும், தனது தந்தையின் செயலுக்கும் பிராயச்சித்தம் தேடிய அவருக்கு இந்த ஆதீனத்தின் வாழ்வுமுறை நிறைவளிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்த பின்னர், மரினுஸ் என்ற மூத்த துறவியின் வழிகாட்டுதலில் தன்னை நெறிப்படுத்தி வெனிஸ் நகர் சென்றார். ரோமுவால்ட் அவர்கள், மரினுஸ் என்ற துறவியுடன் சேர்ந்து, புனித Michel-de-Cuxa என்ற பெனடிக்ட் சபை ஆதீனத்துக்கு அருகில் புதிய ஆதீனம் ஒன்றை எழுப்பினார். இவர் இங்கு ஐந்து ஆண்டுகள் கடும் தவ வாழ்வு நடத்தினார். துறவி ரோமுவால்ட் அவர்களின் தூய வாழ்வால் பலர் ஈர்க்கப்பட்டனர். இவர் அடுத்த முப்பது ஆண்டுகள் இத்தாலியின் பல இடங்களுக்கும் சென்று நற்செய்தியைப் போதித்து ஆதீனங்களையும், சிறு சிறு ஆசிரமங்களையும் தொடங்கினார். தமது காலத்துத் துறவிகளின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக அயராது போராடினார். இதற்கிடையே, தனது வன்செயலுக்காக வருந்தி மனம்மாறி துறவு வாழ்வு வாழ்ந்த தனது தந்தை செர்ஜியுஸ், தான் அதற்கு தகுதியற்றவர் என்று நினைத்து துறவு மடத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்று அறிந்து, உடனடியாக, தனது தந்தையைச் சென்று சந்தித்து அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி அவர் மீண்டும் துறவு வாழ்வு வாழச் செய்தார். டஸ்கனி மாநிலத்தில் Camaldoli எனுமிடத்தில் ஆதீனம் கட்ட வேண்டுமென்று காட்சியில் கண்டதால் அங்கு ஐந்து குடிசைகளுடன் புதிய ஆதீனத்தைத் தொடங்கினார். கடும் தவ வாழ்வு நடத்திய புனித ரோமுவால்ட் 1027ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி தனது 76வது வயதில் இறந்தார். இப்புனிதரின் விழா ஜூன் 19.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.