2014-06-18 16:02:47

அமைதி ஆர்வலர்கள் : 1933ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Sir Norman Angell


ஜூன்,18,2014. அன்பு நேயர்களே, 1932ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. நொபெல் விருதுகளின் விதிகளின்படி, 1932ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதின் தொகை அதன் சிறப்பு நிதியுடன் சேர்க்கப்பட்டது. 1933ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Ralph Norman Angell Lane அவர்கள், பிரித்தானியாவில் 1872ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிறந்தார். ஆறு பிள்ளைகளில் ஒருவராக, செல்வச்சூழலில் வளர்ந்த இவர், தனது அக்கா Carrie அவர்களின் வாழ்வால் தூண்டப்பட்டு, Herbert Spencer, Huxley, Voltaire, Darwin போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விரும்பி வாசித்தார். இவரது வாசிக்கும் பழக்கம் விரிவடைந்தது. பிரித்தானிய மெய்யியல் அறிஞரும், அரசியல் பொருளாதார நிபுணரும், நல்ல குடிமகனுமாகிய John Stuart Mill அவர்களின் சுதந்திரம் குறித்த கட்டுரையை, Norman Angell அவர்கள், தனது 12வது வயதிலேயே வாசித்தார். இவரது அறிவுத் தாகத்துக்கு இதுவே முதல் வித்தாக அமைந்தது. ஜெனீவாவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை பிரசுரமாகும் ஆங்கில இதழ் ஒன்றுக்கு ஆசிரியராகப் பணியாற்றியபோது, பழைய உலகம் தீர்வுகாண முடியாத பிரச்சனைகளில் நம்பிக்கையின்றி சிக்கிக் கிடக்கின்றது என்று உணர்ந்தார். இந்த எண்ணத்தில் உறுதியாய் இருந்த Norman Angell அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் சென்று குடியேற விரும்பினார். அப்போது அவருக்கு வயது 17. அந்நாட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்று திராட்சைக் கன்றுகளை நடுதல், நீர்பாசனத்துக்குக் குழி தோண்டும் வேலை, பசுமாட்டில் பால்கறத்தல் என, பல வேலைகளை ஏழு ஆண்டுகள் செய்தார். சில குடும்ப விவகாரங்கள் காரணமாக மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் Norman Angell.

பின்னர் 1898ம் ஆண்டில் பாரிஸ் நகர் சென்று தினத்தாள் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார் Norman Angell. Daily Messenger என்ற ஆங்கில நாளிதழுக்கு, துணை ஆசிரியராகவும், அதேநேரம் Éclair திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் எழுத்துப் பணியில் உதவி செய்தார். அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டு அரசியலில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திய Dreyfus விவகாரம் குறித்து, சில அமெரிக்க தினத்தாள்களுக்கு செய்தி அனுப்பும் பணியையும் செய்தார் இவர். இந்த Dreyfus விவகாரத்தில் பிரான்சின் தீவிர தேசப்பற்று, இஸ்பானிய-அமெரிக்கப் போரில் அமெரிக்காவின் மனநிலை, Boer போரில் பிரித்தானியாவின் வீறாப்பான தேசப்பற்றுக் கொள்கை ஆகியவற்றில் இவருக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து தேசப்பற்று(Patriotism) என்ற தலைப்பில் தனது முதல் நூலை 1903ம் ஆண்டில் வெளியிட்டார் Norman Angell. அரசியலில் காரண காரியத்துடன் அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமென்று உருக்கமான வேண்டுகோளையும் இந்நூலில் முன்வைத்தார். 1905ம் ஆண்டில், Lord Northcliffeன் Daily Mail இதழின் பாரிஸ் பிரசுரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றார் இவர். அச்சமயத்திலிருந்து இவரின் புகழும் பரவத் தொடங்கியது. 1912ம் ஆண்டில் இப்பணியைவிட்டு விலகி, முழுநேர எழுத்துப்பணிக்கும் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கும் தன்னை அர்ப்பணித்தார் Norman Angell.

ஐரோப்பாவின் பார்வைப் பிம்பங்கள்(Europe's Optical Illusion) என்ற பொருளில் 1909ம் ஆண்டில் ஒரு சிறிய நூலை, Norman Angell என்ற பெயரில் முதன்முறையாக வெளியிட்டார் Ralph Norman Angell Lane. பின்னர் இந்நூலை விரிவுபடுத்தி, The Great Illusion என்று தலைப்பிட்டு 1910ம் ஆண்டில் மீண்டும் ஒரு நூலை வெளியிட்டார் Norman Angell. இந்த நூல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின. இவர் இந்த நூலில் வெளியிட்டிருந்த கொள்கைகள் இவரது பெயராலே அழைக்கப்படும் அளவுக்குப் புகழ் அடைந்தன. இவரது இந்நூலில் வெளியான கூற்று என்னவெனில், “இராணுவ மற்றும் அரசியல் அதிகாரம், எந்த ஒரு நாட்டுக்கும் வர்த்தக முறையாக எந்தவித இலாபத்தையும் கொண்டு வராது. இது, ஒரு நாடு, மற்றொரு நாட்டின் வளத்தைக் கைப்பற்றுவதற்கு அல்லது அழிப்பதற்கு கையிலெடுக்கும் பொருளாதார இயலாமையாகும். இது, ஒரு நாடு, மற்றொரு நாட்டை தனக்குக் கீழ் கொண்டுவந்து தன்னை வளப்படுத்த எடுக்கும் முயற்சியாகும்” என்பது. Norman Angell அவர்கள், அடுத்த 41 ஆண்டுகளில் 41 நூல்களை வெளியிட்டார். 1921ம் ஆண்டில் இவர் வெளியிட்ட வெற்றியின் கனிகள் என்ற நூல், முதல் உலகப் போரின் கடும் விளைவுகள் பற்றி விவரித்திருந்தன. நூல்கள் எழுதுவதோடு, தினத்தாள்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தவறாது எழுதி வந்தார் Norman Angell. எழுத்துப் பணியோடு, அரசியல் வாழ்விலும் இணைந்திருந்த இவர், தொழில் கட்சியின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். நாடுகள், இராணுவ மற்றும் அரசியல் அதிகாரத்தால் பிற நாடுகளை அடக்கி ஆள முயற்சித்ததற்கு எதிராய்க் கடுமையாய்க் குரல் எழுப்பினார் Norman Angell. இப்படி எழுத்துப்பணி மூலம் உலகின் அமைதிக்கென இவர் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி 1933ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 5 அடி உயரமுள்ள, நல்ல உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்தார் Norman Angell. திருமணமாகாதவரான இவர் தனது 94வது வயதில் 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி Croydonல் தனது இல்லத்தில் இறந்தார்.

“அமைதி ஒன்றுக்காக மட்டும் போராடுவது தகுதியான போராட்டமாகும்” என்று சொல்கிறார் Albert Camus. அமைதி நம் இதயத்திலும் இல்லத்திலும் எல்லா இடங்களிலும் நிலவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.