2014-06-17 17:10:36

திருத்தந்தை பிரான்சிஸ் : வயதானவர்களை ஒதுக்கி வைப்பது அநீதியானது மற்றும் சரிசெய்ய இயலாத இழப்பாகும்


ஜூன்,17,2014. சில நேரங்களில் நாம் வயதானவர்களை ஒதுக்கி வைக்கிறோம், ஆனால் அவர்கள் விலைமதிப்பில்லாத சொத்து; அவர்களை ஒதுக்கி வைப்பது அநீதியானது மற்றும் சரிசெய்ய இயலாத இழப்பாகும் என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் திருத்தந்தையாகப் பணியேற்றதிலிருந்து இளையோர் மற்றும் வயதானவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டி அவர்களின் நலனில் அதிகக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வயதானவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாள் ஜூன்,15 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில், இன்று உலகில் 4 முதல் 6 விழுக்காட்டு வயதானவர்கள் வீடுகளில் பல வழிகளில் அவமதிக்கப்படுகின்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்த மூத்த குடிமக்கள் அனுபவிக்கும் உரிமை மீறல்கள் அதிகரிக்கும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்களின் உரிமைகள் குறித்த புதிய ஐ.நா. உடன்பாடு ஒன்று கொண்டுவரப்படுமாறு, HelpAge International அமைப்பு வலியுறுத்தி வருவதாக, அத ன் டான்சானியக் கிளை இயக்குனர் Amleset Tewodros வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.