2014-06-17 17:10:56

கடத்தப்பட்ட அருள்பணி பிரேம் குமார் நலமுடன் திரும்புவார்: ஆப்கான் இந்திய தூதர் நம்பிக்கை


ஜூன்,17,2014. ஆப்கானில் கடத்தப்பட்டுள்ள தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள் நலமுடன் திரும்புவார் என அந்நாட்டுக்கான இந்திய தூதர் அமர் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்கானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அருள்பணியாளர் பிரேம் குமார் நலமாக இருப்பதாகவும் அவர் விரைவில் மீட்கப்படுவார் எனவும் அமர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார், இம்மாதம் 2ம் தேதி ஆப்கானின் ஹெராத் மாநிலத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
ஆப்கானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், அருள்பணியாளர் பிரேம் குமாரை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் பணியை, ஆப்கான் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஆப்கானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தூதர் அமர் சின்ஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அருள்பணியாளர் மீட்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நாங்கள் ஆப்கான் அரசுடன் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் இணைந்தே செயல்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அருள்பணியாளர் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதில் உரிய ஆதாரங்கள் இன்றி இது குறித்து மேலும் எதவும் கூறுவதற்கு இல்லை என்றாலும், அருள்பணியாளர் இன்னும் சில தினங்களில் மீட்கப்படுவார் என்றும் அமர் சின்ஹா கூறினார்.
முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த அருள்பணியாளரை மீட்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 4ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அருள்பணியாளரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ஆப்கான் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் முதல்வரின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திரே மோடி பதிலளித்திருந்தார்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.