2014-06-16 15:57:17

வாரம் ஓர் அலசல் – செயலால் ஏழ்மையை ஒழிப்போம்


ஜூன்,16,2014. அன்பர்களே, இஞ்ஞாயிறன்று உரோம் மாநகரில் நெஞ்சை அதிரவைக்கும் இடியுடனும், கண்களை மூடிக்கொள்ள வைத்த மின்னலுடன் பல மணிநேரங்கள் கொட்டியது மழை. உரோமையில் கோடை வெப்பம் தலைக்காட்டத் துவங்கியுள்ள இந்நாள்களில், அப்பாடா.. வெப்பம் சற்றுத் தணியும் என்று மக்கள் பலர் மகிழ்ச்சியடைந்தனர். ஆண்டவா, இந்த மழை எம் தமிழகத்திலும் பெய்யக் கூடாதா, குறிப்பாக, சில ஆண்டுகளாக மழையால் நனைந்திராத சில மாவட்டங்களின் நிலங்கள் இந்த மழையால் நனையாதா என்று மனம் ஏங்கியது. கடந்த மாதத்தில் தமிழகத்தில் சில இடங்களில் பயணம் செய்தபோது சில ஆண்டுகளாக மழையே பெய்யாமல் வறண்ட நிலங்களைக் காண முடிந்ததே இந்தச் செபத்துக்குக் காரணம். இந்த வையம் தழைக்க வானம் மழை பொழிகிறது. இந்த வையத்தில் இருள் மண்டிவிடாதபடி அதனைக் காப்பதற்கு கதிரவன் பகலில் ஒளி தருகிறான். மனிதர் நெஞ்சங்கள் இருளிலும் இருண்டவிடாதபடி அதனைக் குளிரச் செய்வதற்கு இரவில் சந்திரன் ஒளியைக் கொடுக்கிறது. மனிதர் எந்தச் சூழலிலும் உயிர்வாழ்வதற்கு உதவ, காற்று வீசுகிறது. சில நேரங்களில் அது மெல்லிய தென்றலாக வீசி உடலாலும் மனத்தாலும் சோர்ந்திருக்கும் மனிதருக்குப் புத்துயிர் ஊட்டுகிறது. இப்படி இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித சமுதாயத்துக்கு உதவி வருகிறது. ஆனால் இவ்வளவு நன்மைகளையும் இயற்கையிடமிருந்து இலவசமாகப் பெறும் மனிதர் மட்டும், தான் மட்டும் வாழ, தனது உறவுகள் தழைக்க என, இரவு பகல் பாராமல் இயந்திரம் போல் செயல்பட்டு வருகின்றனர். இந்த மனிதர்களில் வித்தியாசமானவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் பற்றி வேறொரு நிகழ்ச்சியில் பார்ப்போம். ஆனால், வாழ்க்கை வானத்தில் பொதுநலச் சிறகு கட்டிப் பறக்கத் தெரியாத, பறக்க மறந்திருக்கும் மனிதர்களால், பல கோடி மக்கள் அனுபவித்துவரும் துன்ப நிலை பற்றி இன்று பார்ப்போம்.
உலகின் மக்கள்தொகையில் குறைந்தது 80 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு பத்து டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். ஏழ்மையினால் உலகில் தினமும் 22 ஆயிரம் சிறார் வீதம் இறக்கின்றனர். மேலும், உலக நாடுகளில் 120 கோடி ஏழைகள் வாழ்வதாகவும், இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் வாழ்வதாகவும் இந்த 2014ம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய இந்த ஆய்வில், உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான் எனவும், இந்தியர்களில் பலர் நாளொன்றுக்கு 65 ரூபாய்க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்திங்களன்று, தி இந்து தினத்தாளில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் கடந்த மே மாதத்திற்கான நாட்டின் பணவீக்கம் 6.01 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, காபி, தேநீர் போன்ற பானங்கள் விலை மற்றும் மீன், காய்கறி விலைவாசி உயர்வால் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவில் மட்டுமல்ல, நம் சொந்தங்கள் வாழும் இலங்கை, இன்னும் பல நாடுகளில் ஏழைகளின் நிலைமையை சொற்களால் விவரிக்க இயலாது.
2013ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் Varginha நகரில் ஏழைமக்கள் வாழும் பகுதியைப் பார்வையிட்டபோது திருத்தந்தை பிரான்சிஸ் இப்படிச் சொன்னார். “தேவையில் இருக்கும் மக்களை மனத்தாராளத்துடன் நம் இல்லங்களில் வரவேற்று நம்மிடருக்கின்ற ஏதாவது சிலவற்றை பகிரும்போது நாம் ஏழைகளாக மட்டும் தொடர்ந்து இருக்கப்போவதில்லை, அதோடு நம் வாழ்வும் சிறப்படைகிறது. நம்மிடம் இருக்கும் சிறிதளவு உணவை, நம் வீட்டில் சிறிது இடத்தை, நம் நேரத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது நம் வாழ்வு வளமடைகிறது. சமைக்கும் காய்கறிக் கூட்டில் அல்லது சமைக்குள் குளம்பில் இன்னும் சிறிதளவு தண்ணீரை ஊற்று என்ற பழமொழி போலச் செயல்பட்டால், ஒருவர் உணவு கேட்டு உங்கள் வீட்டுக்கதவைத் தட்டும்போது, உங்களிடம் இருக்கின்ற உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு எப்போதும் உணவு இருக்கும். ஆம். காய்கறிச் சமையலில் சிறிதளவுத் தண்ணீரை அதிகம் சேர்க்க இயலுமா, இயலும். அதை அன்புடன் செய்தால் இயலும். பொருளாதார ஆதாயத்தில் கருத்தாய் இல்லாமல் இதயத்தில் நிறைந்த அன்புடன் இருந்தால் அதைச் செய்ய முடியும்”. இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமையில் வாடும் நம் சகோதர சகோதரிகள் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன என்ற கேள்வியையும் அன்றைய நாளில் எழுப்பினார். திருத்தந RealAudioMP3 ்தை அவர்கள் இந்த ஜூன் மாதச் செபக் கருத்திலும், செபம் மற்றும் செயல்கள் வழியாக உலகின் ஏழ்மையை ஒழிப்போம் என்றுதான் கேட்டுள்ளார்.
ஏழைகளின் நல்வாழ்வுக்கெனத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த ஒரு குழுவினரிடம், ஏழைகளின் வாழ்வு உய்வுபெறுவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தார RealAudioMP3 ். திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, “ஏழைகளுக்கு உதவும் வகையில் முதலீடுகள் செய்தல்” என்பது குறித்து இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ள அனைத்துலக கருத்தரங்கில் பங்குகொள்கின்ற ஏறக்குறைய நூறு பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு பரிந்துரைத்தார் திருத்தந்தை. பொதுநலனுக்குத் தொண்டுசெய்யும்போது, நலிந்தவர்கள் மற்றும் வறியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பணிசெய்ய முன்வருவோம். பொருளாதார உலகில் அறநெறி விழுமியங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். பொதுச்சந்தைகள் மனித சமுதாயத்தின் பொதுநலனுக்கும், மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதாய் அமைய வேண்டும். நிதிச் சந்தைகள், மக்களின் தேவைகளுக்குத் தொண்டுசெய்வதை விடுத்து, அவர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாய் அமைந்திருப்பது, பெரும் கவலையளிக்கின்றது. உணவுப்பொருள்களின் விலைவாசி உயர்வு ஏழைகளை அதிகம் தாக்குகின்றது. எனவே, தாங்கள் செய்யும் முதலீடுகளின் நல்தாக்கங்கள் ஏழைகளுக்கு உதவுவதாய் இருப்பதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
RealAudioMP3 இவ்வாறு இத்திங்களன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பர்களே, இன்றைய உலகில் 84 கோடியே 20 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் இறப்புக்களில் 50 விழுக்காட்டுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவே காரணம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் கூறுகிறது. இயேசு பெருமான் நாம் யாருக்கு விருந்தளிக்க வேண்டுமென்பதை அழகாகச் சொல்லயிருக்கிறார். நீங்கள் விருந்துண்ணும்பொழுது, பணம்படைத்தவர்களையோ, பக்கத்து வீட்டாரையோ, உறவினரையோ அழைக்காமல், ஏழைகளையும், மாற்றுத்திறனாளிகளையும் அழையுங்கள் என்று அவர் சொன்னார். நபிகள் நாயகத்திடம் ஒருவர் சென்று, பெருமானே, என் மனம் கல்லாய் இருக்கின்றது, நான் என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு நபிகள், ஆதரவற்ற அநாதைகளுக்கு அபயம் அளியுங்கள், பசித்தவர்க்கு வயிறார உணவு இடுங்கள் என்று சொன்னார். அண்டை வீட்டார் வயிற்றுக்கு இல்லாது வாடும்போது தன் வயிறு புடைக்க உண்பவர், இறைநம்பிக்கை உள்ளவராக இருக்கமாட்டார் என்றும் நபிகள் சொல்லியிருக்கிறார்.
அன்பர்களே, பல ஆண்டுகளாக சண்டை இடம்பெற்ற ஈராக்கில் அரசுக்கு எதிராக, தற்போது மீண்டும் கடும் மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்களும், இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். புரட்சியாளர்கள் அண்மையில் கடத்திச் சென்ற 1,700 இராணுவ வீரர்களை, கொத்துக்கொத்தாகக சுட்டுக் கொன்றதாக இந்த புரட்சியாளர் அமைப்பினர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளதாக இத்திங்களன்று ஊடகங்கள் கூறுகின்றன. ஈராக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நாட்டில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தையும் அழைப்புவிடுத்து அந்நாட்டுக்காக அன்னைமரியிடம் செபித்த RealAudioMP3 ார். சிரியாவிலும் சண்டையால் தொடர்ந்து மக்கள் துன்புறுகின்றனர். இத்தகைய நிலைகளால் இன்று உலகெங்கும் ஏழ்மையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எல்லாவற்றிலும் முதற்பங்கு ஏழை-எளியவர்க்குத் தரப்பட வேண்டும். எஞ்சியிருப்பதை பெறவே நமக்கு உரிமை உண்டு. முதலில் நம்மைச் சுற்றியிருப்பவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபட வேண்டும் என்றார் விவேகானந்தர். மகாபாரதம் காட்டும் ஆண் புறாக் கதை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த ஆண் புறா, தனது துணைவி பெண் புறாவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த வேடரின் பசியைப் போக்குவதற்குத் தீயில் விழுந்து தன்னையே உணவாகத் தந்தது. எனவே அன்பர்களே, எம்மதத்தவர், எக்குலத்தவர், எந்நாட்டினர் என்ற வேற்றுமை பாராது வாடுவோரின் பசியைப் போக்க முயற்சிப்போம். நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து உண்ணுவோம், இருப்பதைப் பகிர்ந்து கொடுப்போம். அப்போது நம் வாழ்வு செழிப்படையும், மன அமைதி நிரம்பிய வாழ்வு அமையும். எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியதுபோன்று, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம் என உணருவோம். பக்தர்கள் செய்ததுபோன்று, வீதியில் சென்று பசித்திருப்போரை வருந்தி அழைத்து உணவு தராவிட்டாலும், நம்மை நாடி வரும் ஏழை எளியவர்க்கு உணவளிப்போம். உலகின் ஏழ்மையை நம் பிறரன்புச் செயல்களால் ஒழிப்போம்.








All the contents on this site are copyrighted ©.