2014-06-16 15:54:14

முகாம்களில் உள்ள குழந்தைகளை உடனடியாக ஆஸ்திரேலிய அரசு விடுவிக்கவேண்டும் - இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழு


ஜூன்,16,2014. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடி வரும் மக்களைத் தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் உள்ள குழந்தைகளை உடனடியாக ஆஸ்திரேலிய அரசு விடுவிக்கவேண்டும் என்று இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவான JRS எனப்படும் அமைப்பு விண்ணப்பித்துள்ளது.
2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை நாடிவந்துள்ள மக்களில், 833 குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவு எனப்படும் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய JRS பணிக்குழுவைச் சேர்ந்தவர்கள், இக்குழந்தைகள் உடனடியாக ஆஸ்திரேலியா நாட்டிற்குள் அழைத்துச் செல்லப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் நடைபெறும் மோதல்கள், கலவரங்கள் ஆகிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்குக் கிடையாது என்றும், இக்குழந்தைகள் இன்னும் பிற தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஆபத்திற்கு இலக்காகின்றனர் என்றும் இயேசு சபையினரின் விண்ணப்பம் கூறுகின்றது.
குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, நலவாழ்வு, விளையாட்டு போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் குழந்தைகள் தொடர்ந்தால், அவர்களது எதிர்காலம் நம்பிக்கையற்றதாக மாறிவிடும் என்று JRS பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.