2014-06-16 16:01:57

புனிதரும் மனிதரே : துன்பத்தைக் கண்டு ஒதுங்கியவர்(St. Augustine of Canterbury)


ஜெர்மனியின் வடபகுதியைச் சேர்ந்த சாக்ஸன்(Saxon) என்ற பழங்குடியினத்தவர் இங்கிலாந்தை ஆக்ரமித்து பிரித்தானியாவின் பெருமளவான பகுதிகளில் குடியேறினர். ஆங்லோ-சாக்ஸன் இங்கிலாந்தும் உருவானது. ஆனால் இந்தப் பழங்குடியினர் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தனர். எனவே கிறிஸ்தவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர். ஆங்லோ-சாக்ஸன் இங்கிலாந்தில், நற்செய்தி அறிவிப்பதற்கு இதுவே ஏற்ற காலம் எனக் கருதிய அப்போதைய திருத்தந்தை புனித பெரிய கிரகரி, அகுஸ்தீனையும் அவரோடு முப்பது அகுஸ்தீன் சபைத் துறவிகளையும் அனுப்பினார். இது ஆபத்தான மறைப்பணி எனத் தெரியும். எனினும், இங்கிலாந்து நோக்கிய பயணத்தில் பிரான்ஸ் வந்துசேர்ந்தபோதே சாக்ஸன் இனத்தவரின் பயங்கரமான மற்றும் கொடூரமான செயல்கள் பற்றி அவர்கள் கேள்விப்பட்டனர். எனவே பயந்துகொண்டு உரோமைக்கேத் திரும்பி விட்டனர். அங்கு அனைத்தையும் அறிந்த திருத்தந்தை, இதுதான் நற்செய்தி அறிவிப்புக்கு ஏற்ற காலம் எனச் சொல்லி அத்துறவிகளை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டார். இங்கிலாந்து அரசர் எத்தெல்பெர்ட் மனம் திரும்புவார் என அத்துறவிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இவர்களின் போதனையைக் கேட்டதோடு விட்டுவிட்டார். ஆனால் 597ம் ஆண்டில் மனமாறினார். தனது அரசில் அனைவரும் திருமுழுக்குப் பெற வேண்டுமென்று கூறினார். அகுஸ்தீன் இங்கிலாந்தின் கான்டர்பரி ஆயரானார். இங்கிலாந்துக்குப் புதுவாழ்வளித்தார். 605ம் ஆண்டில் இவர் இறந்தார். புனித கான்டர்பரி அகுஸ்தீன் விழா இங்கிலாந்தில் மே 26. மற்ற இடங்களில் மே 28.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.