2014-06-16 15:49:20

திருத்தந்தை பிரான்சிஸ் - களைப்படைந்துள்ள ஐரோப்பா மீண்டும் புத்துணர்வு பெறவேண்டும்


ஜூன்,16,2014. களைப்படைந்துள்ள ஐரோப்பா மீண்டும் புத்துணர்வு பெற்று, இளமை பொங்க செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஜூன் 15, இஞ்ஞாயிறன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Sant'Egidio என்ற அமைப்பினர் நடத்தும் மையத்தில் பராமரிக்கப்படும் வறியோர், முதியோர் ஆகியோரைச் சந்திக்கச் சென்றார்.
அந்த மையத்தில் தங்கியிருப்போர், அங்கு பணியாற்றுவோர் அனைவருக்கும் உரை வழங்கியத் திருத்தந்தை, முதியோரையும், குழந்தைகளையும் பராமரிப்பதில் ஐரோப்பாவின் பல நாடுகளில் களைப்படைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நினைவுகளைத் தாங்கி வாழும் முதியோரையும், சக்தியுடன் செயலாற்றத் துடிக்கும் இளையோரையும் ஓரங்களில் தள்ளிவிடும் எந்த ஒரு சமுதாயமும் நலனுடன் வாழ இயலாது என்று திருத்தந்தை எச்சரித்தார்.
25 வயதுக்குட்பட்ட இளையோரை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இப்பருவத்தினர், கல்வி கற்கும் வயதைத் தாண்டி, அதே நேரம் வேலையில் அமராமல் இருப்பதால், அவர்களைக் குறித்து சலிப்படையும் நிலைக்கு பல நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இஞ்ஞாயிறு மாலை 4.30 மணியளவில் வத்திக்கானிலிருந்து புறப்பட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் Trastavere என்ற பகுதியில் அமைந்துள்ள புனித மரியாவின் சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைச் சந்தித்தபின், மரியன்னையின் பசிலிக்காவில் சிறிது நேரம் செபித்தார்.
Sant'Egidio அமைப்பினரின் தாய் இல்லம் என்று அழைக்கப்படும் மரியன்னை பசிலிக்காவில் கூடியிருந்த அனைவருக்கும் தன் உரையை வழங்கி, ஆசீர் வழங்கியபின், மீண்டும் புறப்பட்டு மாலை 7 மணியளவில் வத்திக்கானை அடைந்தார்.
2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் தொடர்ந்து, 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட Sant'Egidio அமைப்பு, தற்போது உலகெங்கும் 60,000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு, உலகின் 73 நாடுகளில் பணியாற்றிவருகிறது.
நற்செய்தியைப் பரப்புதல், வறியோருக்கு உதவுதல், கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்த்தல் ஆகியவை, இவ்வமைப்பினரின் முக்கியக் குறிக்கோள்களாக விளங்குகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.