2014-06-16 15:48:28

திருத்தந்தை - ஆட்சி, அதிகாரம் என்ற சக்திகளைச் சரிவரப் பயன்படுத்தாவிடில், அங்கு ஊழலும், தீமையும் பெருகும்


ஜூன்,16,2014. ஊழல் என்ற பாவத்தைப் போக்க ஒரு சிறந்த வழி, நம் மனதைத் தூய்மைப்படுத்தும் பிறரன்புப் பணியே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, பேராசையால் விளையும் துன்பங்களைக் குறித்து, தன் மறையுரையில் பேசினார்.
சமாரிய அரசன் ஆகாப்பின் மனைவி, ஈசபெல், எளிய மனிதன் நாபோத்திடமிருந்து, அவருக்குரிய திராட்சைத் தோட்டத்தைப் பெறுவதற்கு, அவரைக் கொல்லும் அளவு சூழ்ச்சி செய்த நிகழ்வை (1 அரசர்கள் 21: 1-16) மையப்படுத்தி திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.
அக்காலத்தைப் போலவே, இன்றும், அரசியல் தலைவர்கள், பெரும் நிறுவன உரிமையாளர்கள், நீதி மன்றங்கள் வழியே குற்றமற்றவர்களென தீர்ப்புப் பெறுவதையும், அப்பாவிகள், குற்றவாளிகள் என்று தீர்ப்புப் பெறுவதையும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தளமாக இருந்தாலும் சரி, திருஅவைத் தளமாக இருந்தாலும் சரி, ஆட்சி, அதிகாரம் என்ற சக்திகளைச் சரிவரப் பயன்படுத்தாவிடில், அங்கு ஊழலும், தீமையும் பெருகும் என்று திருத்தந்தை எச்சரித்தார்.
நம்மை தற்பெருமையிலும், மமதையிலும் ஆழ்த்திவிடும் ஊழல் என்ற தீமையிலிருந்து விடுதலை பெற, பணிவுடன் பிரரன்புப் பணியில் நம்மையே ஈடுபடுத்தவேண்டும் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.
கையூட்டுக் கொடுப்பதிலும், ஊழல்களிலும் சிக்கியுள்ள உலக நிறுவனங்களையும், திருஅவையையும் இறைவன் விடுவிக்க வேண்டுமென அவரிடம் மன்றாடுவோம் என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், "இன்றையக் கடினமானச் சூழலில், இறைவன் நம் குடும்பங்களை ஆசீர்வதித்து, வலிமையாக்குவராக" என்ற செய்தியை, இத்திங்கள் காலை தன் Twitter பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.