2014-06-14 14:47:55

மூவொரு இறைவன் பெருவிழா ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தை நாம் ஆரம்பிக்கிறோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்துவந்தது ஒரு சிறப்புக்காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்துவந்தது ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்.
வாழ்வில், கொண்டாட்டங்கள் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக பெரிதான, பிரமிப்பான உண்மைகள் வெளிப்படும்போது, அதுவும், மகிழ்ச்சியைத் தரும் உண்மைகள் வெளிப்படும்போது, நமது பதில் எப்படி இருக்கும்? மகிழ்வில் நாம் மூழ்கும் நேரங்களில், பேச்சிழந்து போவோம். கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது அல்லது தரவேண்டியது இன்றைய மூவொரு இறைவன் திருவிழா.

மூவொரு இறைவன் என்றதும், நம்மில் பலருக்கு மறைவல்லுனரான புனித அகஸ்டின் அவர்களைப் பற்றிய ஒரு கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரை மணலில் ஒருநாள் நடந்துகொண்டிருந்த புனித அகஸ்டின் அவர்கள், நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார். அக்கடற்கரையில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், புனித அகஸ்டின் அவர்களின் கவனத்தை ஈர்த்தான். அச்சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். நான்கு அல்லது ஐந்து முறை சிறுவன் இதுபோல் செய்ததைப் பார்த்த அகஸ்டின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகஸ்டின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகஸ்டினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
ஒரு குழந்தையின் வழியே அதிர்ச்சி மருத்துவம் கொடுத்து, தன்னைப்பற்றிய ஒரு புதுப்பாடத்தை இறைவன் தனக்குச் சொல்லித்தந்தார் என்பதை, புனித அகஸ்டின் உணர்ந்தார். "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகுஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது" என்றார் அவர்.

அமெரிக்க அரசுத்தலைவராய் இருந்த Franklin D.Roosevelt (FDR) அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruch அவர்களும், ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவான அந்த இரவு வானில் கண்சிமிட்டிய விண்மீன்களைப் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத் தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பழக்கத்தின் வழியாக, தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மனநிலையோடு அவர் உறங்கச்சென்றது அவர் தனக்குத் தானே கற்றுத்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகள், அல்லது ஆண்டவனை நமது அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகள் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமான திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.
“The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
- Albert Einstein, The World As I See It (1949)
"இவ்வுலகில், மிக ஆழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்" என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இவ்வுலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டுபிடித்த அந்த மாமேதையே, வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.

புனித அகஸ்டின் தன் மனதின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய மூவொரு கடவுள் என்ற உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார். புனித அகஸ்டின் எப்படி என்ற கேள்விக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம்.
நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரைக் கோபத்தால் நிறைத்தது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

நாம் வாழும் இன்றைய உலகில், நம் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதான பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று இரு காரணங்கள் உள்ளன. உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம் என்பது முதல் காரணம். இன்று உலகின் பல நாடுகளில் தந்தை தினம் கொண்டாடப்படுகிறது என்பது இரண்டாவது காரணம்.
மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம். 1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 தொழிலாளிகள் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம் தந்தைக்கு ஒரு தினம் என்று இந்த உலகம் கொண்டாடி வருகிறது. இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் ஒரு நாளோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம் மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன ஒரு வியாபாரத் திருநாளாக மாறிவிட்டது என்று வருத்தப்பட்டோம். அதேபோல், தந்தை தினமும் வியாபாரத் திருநாளாக மாறிவிட்டது. வயது முதிர்ந்த காலத்தில் தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்து போய்விடுகின்றனவா?
இன்று மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உறவுகளின் ஊற்றான இறைவன், நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சொல்லித்தர வேண்டும். அதிலும் சிறப்பாக, தாங்கள் வளர்த்துவிட்ட உறவுகள் தங்களை மறந்துபோய் விட்டதால், உறவுகள் மீதே சந்தேகங்களை வளர்த்து வாழும் வயதுமுதிர்ந்த பெற்றோரின் முக்கியத்துவத்தைப்பற்றி நமக்குச் சொல்லித்தர வேண்டும்.

இறுதியாக, ஒரு சிறப்பு வேண்டுதலுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். ஈராக் நாட்டில் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால், பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன. உறவின் ஊற்றான மூவொரு இறைவன், அந்த நாட்டிற்கு அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.