2014-06-14 14:47:33

புனிதரும் மனிதரே - புனிதரைத் தூண்டியப் புனிதர் - புனித ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ்


பிரான்ஸ் நாட்டில் செல்வம் மிகுந்த ஒரு வணிகரின் மகனாக, 1597ம் ஆண்டு பிறந்தவர், ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் (John Francis Regis). இயேசு சபையினரிடம் கல்வி பயின்ற இவர், தன் 18வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர் துறவறப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மறைக்கல்வி சொல்லித்தருவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரிடம் மறைக்கல்வி பயின்ற குழந்தைகள், தங்கள் பெற்றோரையும் அழைத்து வந்தனர். ஆண்டுகள் பல கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விலகியிருந்த இப்பெற்றோர்களில் பலர், இவரது மறைகல்வி வகுப்புக்களால் மனம் மாறி, திருஅவை வாழ்வில் ஈடுபட்டனர்.
1631ம் ஆண்டு, தன் 34வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஜான் பிரான்சிஸ் அவர்கள், மறையுரை ஆற்றுவதிலும், ஒப்புரவு அருள்சாதனம் வழங்குவதிலும் முழுமையாக ஈடுபட்டார். கொட்டும் மழையிலும், கடும் பனியிலும் இவர் தன் மேய்ப்புப்பணி தலங்களுக்குச் செல்வதை நிறுத்தவில்லை. ஒருமுறை, கொட்டும் பனியில் நின்றபடி இவர் மறையுரையாற்றியதை, மக்கள் நீண்ட நேரம் கேட்டனர் என்று கூறப்படுகிறது.
1640ம் ஆண்டு, தன் 43வது வயதில் இறைவனடி சேர்ந்த ஜான் பிரான்சிஸ் அவர்களை, 1737ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் கிளமென்ட் அவர்கள் புனிதராக உயர்த்தினார்.
1806ம் ஆண்டு, புனித ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் அவர்களின் திருத்தலத்திற்குச் சென்றவர்களில் ஒருவர், "ஆர்ஸ் நகரின் அருள்பணியாளர்" (Curé d'Ars) என்று புகழ்பெற்ற புனித ஜான் மரிய வியான்னி. புனித ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் அவர்களின் திருத்தலத்திற்கு தான் மேற்கொண்ட திருப்பயணமும், அப்புனிதரின் பரிந்துரையும் தன்னை ஒரு அருள்பணியாளராக மாற்றியது என்று புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் கூறியுள்ளார். புனிதரான ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் அவர்களின் திருநாள், ஜூன் 16ம் தேதி, அல்லது, ஜூலை 2ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.