2014-06-14 16:04:33

திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய பக்த இயக்கத்திடம் : கிறிஸ்துவைப்போல் தெருக்களில் நடந்து செயல்படுங்கள்


ஜூன்,14,2014. நம் போதகராகிய கிறிஸ்துவின் வாழ்வைப் பின்பற்றி, நாம் சந்திக்கும் மக்களின் வாழ்வோடு நம்மைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பழமைமிக்க இத்தாலிய பக்த இயக்கத்தின் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், இச்சனிக்கிழமை நண்பகலில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நம் சொற்கள், செயல்கள், நம் எண்ணங்கள் ஆகிய அனைத்தும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பிறரின் துன்பங்களைக் கண்டு ஒதுங்கிச் செல்லாமல் சகோதரத்துவப் பாசத்தோடு அவர்களை அணுகுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏழ்மை, மனிதத் துன்பங்கள் பற்றி நாம் ஏராளமான தகவல்களையும், புள்ளி விபரங்களையும் கொண்டிருக்கிறோம், இவற்றின் உண்மையான பிரச்சனைகளை நோக்காமல், வெறும் இனிய உரைகளால் இவற்றுக்குத் தீர்வு கூறும் ஆபத்தும் இருக்கின்றது என்று எச்சரித்தார்.
வார்த்தைகள் எதையும் தீர்த்துவிடாது, மாறாக பிறரன்புப்பணி, கிறிஸ்தவ சாட்சியம், இயேசு செய்ததுபோல துன்புறுவோரைச் சந்திக்கச் செல்வது ஆகியவை தேவைப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, தெருக்களில் நடந்து, வழியில் வருவோரைச் சந்தித்து அவர்களுக்கு உதவிய இயேசுபோல் செயல்படுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்கென 770 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் தொடங்கப்பட்ட Misericordie என்ற இறைஇரக்க இயக்கத்தில் தற்போது முப்பதாயிரம் தன்னார்வப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மஞ்சளும் நீலமும் கலந்த சீருடைகளை அணிந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.