2014-06-14 16:04:40

திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி அறிவிப்பதில் கிடைக்கும் மகிழ்வு திருடப்பட்டுவிட நம்மைக் கையளிக்காதிருப்போம்


ஜூன்,14,2014. ஆண்டவரின் சீடர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பதன் மகிழ்வைப் பேணிப் பாதுகாப்போம் என, இவ்வாண்டு உலக மறைபரப்பு நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற அக்டோபர் 19ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு நாளுக்கென இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியில், நற்செய்தி அறிவிப்பதால் கிடைக்கும் மகிழ்வு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இயேசு தம் 72 சீடர்களையும் நற்செய்தி அறிவிக்க அனுப்பிய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து செய்தி வழங்கியுள்ள திருத்தந்தை, தலத்திருஅவைகளின் நற்செய்திப் பணியில் ஒற்றுமையை ஊக்குவிக்க வேண்டியது, நற்செய்தி அறிவிப்பதில் முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ள ஆயர்களின் கடமை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களின் பகுதிகளில் நற்செய்தியை கேட்பதற்கு ஆர்வம் கொண்டிருக்கும் பெருமளவான ஏழைகளுக்கும், தூர இடங்களுக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதில் ஆயர்கள் அக்கறை காட்டுமாறும் இச்செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை.
உலகின் பல பகுதிகளில் இறையழைத்தல்கள் குறைந்து வருவதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சமூகங்களில் அப்போஸ்தலிக்க ஆர்வம் இல்லாததே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இயேசுவின்மீது அன்பும், தேவையில் இருப்போர்மீது அக்கறையும் காட்டுவதை அடித்தளமாகக் கொண்ட ஆழமான சகோதரத்துவ வாழ்வு பங்குத்தளங்களிலும் குழுக்களிலும் வெளிப்படுமாறு ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்துவை வழங்குவதற்கான மகிழ்வும், ஆர்வமும், ஆவலும் எங்கு இருக்கின்றதோ அங்கு உண்மையான, நல்ல இறையழைத்தல்கள் மலரும் எனவும் இவ்வாண்டு உலக மறைபரப்பு நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1927ம் ஆண்டில் முதல் உலக மறைபரப்பு நாள் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc Pope Francis’ message for World Mission Sunday 2014







All the contents on this site are copyrighted ©.