2014-06-14 16:05:00

திருத்தந்தை பிரான்சிஸ் : உலகப் பொருளாதார அமைப்பு வலுக்கட்டாயமாக போருக்கு இட்டுச் செல்கின்றது


ஜூன்,14,2014. உலகப் பொருளாதார அமைப்பு, உலகில் வல்லமை மிக்க நாடுகளை உயர்த்திக்காட்டும் விதமாக, இராணுவத் தாக்குதல்களை வலுக்கட்டாயமாக ஊக்குவிக்கின்றது என்று குறை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
La Vanguardia என்ற இஸ்பானிய தினத்தாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள விரிவான பேட்டியில், சமயத் தீவிரவாதம், மத்திய கிழக்கில் அமைதி, கடவுளின் பெயரால் நடத்தப்படும் வன்முறை, திருஅவையும் ஏழைகளும், திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தம், திருத்தந்தை 12ம் பத்திநாதரும் யூத இன அழிப்பும், தற்போதைய உலகப் பொருளாதார அமைப்பு, பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி போன்ற பல தலைப்புக்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை. அனைத்துக்கும் மேலாக, தான் ஒரு மேய்ப்பராகக் கருதுவதாகவும், மக்களுக்குப் பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் தன்னில் இருக்கின்றது, ஆயினும் தான் ஒரு திருத்தந்தையாக இருப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணத்தை வழிபடுவதற்கு எதிரான தனது கண்டனத்தையும் வெளியிட்டார்.
சிலைவழிபாட்டுப் பாவமாக இருக்கின்ற பணம், உலகப் பொருளாதார அமைப்பின் மையமாக அமைந்துள்ளது என்றும், பொருளாதாரச் சிலைவழிபாடுகளின் வரவு செலவைச் சரிசெய்வதற்கு, பொருளாதார அமைப்புகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்கின்றன என்றும் குறை கூறினார் திருத்தந்தை.
இளையோர் வேலைவாய்ப்பின்மை மிகக் கடுமையாய் உள்ளது எனவும், கடவுளின் பெயரால் நடத்தப்படும் வன்முறை இக்காலத்தோடு ஒத்துப்போகவில்லை, அதற்கு முரணாக உள்ளது எனவும், தீவிரவாதம், அனைத்து மதங்களிலும் ஆபத்தாய் இருக்கின்றது உள்ளது எனவும் கவலை தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடன் இணைந்து வத்திக்கானில் இடம்பெற்ற அமைதிக்கான செப நிகழ்வு நடக்க சாத்தியம் இல்லை என 99 விழுக்காடு கூறப்பட்டாலும், அது ஓர் அரசியல் நிகழ்வாக இல்லாமல் சமய நிகழ்வாக நடந்ததையும் தனது பேட்டியில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
யூத இனத்துக்கு எதிரான போக்கைக் கண்டித்துப் பேசிய திருத்தந்தை, யூத இன அழிப்புக்கு எதிராக, திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் எடுத்திருந்த முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போது பிரேசிலில் நடந்துவரும் கால்பந்து போட்டியில் தான் நடுநிலை வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஒரு நல்ல மனிதராக நினைவுகூரப்படுவேன் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
La Vanguardia இஸ்பானிய தினத்தாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள விரிவான பேட்டி, ஜூன் 12 இவ்வியாழனன்று பிரசுரிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.