2014-06-13 15:50:06

மத நல்லிணக்கத்தை உருவாக்க இராமாயணம் படிக்கிறேன்: வரிக்கு வரி விளக்கம் தருகிறார் ‘இராமாயண’ சாகிபு


ஜூன்,13,2014. மத நல்லிணக்கத்தை உருவாக்க இராமாயணம் படிக்கிறேன் எனச் சொல்கிறார் தென்காசி ராஜா முகமது என்ற ‘இராமாயண’ சாகிபு
எம்மதமும் சம்மதம் என்கிறார்கள். நான் எம்மதமும் நம்மதம் என்கிறேன். தன்னோடு வந்து சேர்ந்தவர்களை எல்லாம் தோழர்களாக்கினார் ராமபிரான். நபிகள் நாயகம் தனது தோழர்களை ’சகாபாக்கள்’ என்று சொன்னார். சகாபா என்பதுதான் சாகிபு ஆகிவிட்டது. எனவே, நான் இராமாயணத்தின் தோழன் எனக்கூறி, மதவாதிகளுக்குச் சவுக்கடி கொடுக்கிறார் இராமாயண சாகிபு.
தென்காசியைச் சேர்ந்த ராஜா முகமது அவர்கள், கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகள் பணி செய்து இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி மீதும் சைவத்தின் மீதும் தீராப்பற்று கொண்ட இவர், கம்ப இராமாயணப் பாடல்களை இசையுடன் பாடி, வரிக்கு வரி அழகாய் பொருள் விளக்கம் தருகிறார் ராஜா முகமது.
நெல்லை, கோவை, மதுரை, காரைக்குடி, சென்னை என அனைத்து ஊர் கம்பன் கழக மேடைகளிலும் ராஜா முகமதுவின் குரலில் கம்பராமாயண பாடல்கள் கணீரென்று ஒலித்திருக்கின்றன. ராமாயணத்தின் மீது இவர் கொண்டிருக்கும் பற்றுதலை பாராட்டி 2011-ல் நெல்லை கம்பன் கழகம் கொடுத்த பட்டம்தான் ‘ராமாயண சாகிபு’. இப்போது இவரை ராமாயண சாகிபு என்றால் தான் பல பேருக்குத் தெரிகிறது.
நீங்கள் ராமாயணம் படிப்பதை உங்கள் மனைவி - மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேட்டதற்கு, ‘‘எனக்கு உந்து சக்தியே அவர்கள்தான். ‘தவம் செய்த தவமாம் தையல்’என்று சீதையைப்பற்றி அனுமன் சொல்கிறார். என்னுடைய துணைவியார் ரஹிமா பீவிக்கு ‘தவம் செய்த தவம்’ என்ற விருதை தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் வழங்கி இருக்கிறார். ரஹிமா எனக்குப் பக்கபலமாய் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும்?’’ என்று சொல்கிறார் இராமாயண சாகிபு.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.