2014-06-13 15:22:37

புனிதரும் மனிதரே - வானதூதர்களால் காக்கப்பட்டவர் - புனித சிசிலியா


புனித சிசிலியா ஒரு உரோமைய கிறிஸ்தவரின் மகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பெற்றோருடைய வற்புறுத்தலால் வலேரியன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் அவருடைய விருப்பமோ ஒரு கன்னியாக இருப்பது மட்டுமே. திருமண நாள் அன்று அவர் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் எந்த குழப்பமும் இல்லாமல் என் மனது மற்றும் உடலைத் துய்மையாக வைத்திருக்க உதவும்" என வேண்டினார். திருமணம் முடிந்து வீடு சென்ற பின் புனித சிசிலியா தன் கணவரைப் பார்த்து, தன் கற்பை ஒரு காவல் தூதர் கோபத்துடன் காத்து வருவதாகச் சொன்னார். அப்படி என்றால் உன் காவல் தூதரை எனக்கு காட்டு என்றார் அவர் கணவர். புனித சிசிலியா அவரிடம், ‘கத்தோலிக்க திருச்சபையை விசுவசித்து திருமுழுக்குப் பெற்றால் மட்டுமே நீர் அவரைப் பார்க்க முடியும்’ என்றார்.
தன் மனைவி சொன்னதை விசுவசித்து அவர் திருமுழுக்குப் பெற்றார். அன்று இரவு தன் மனைவி ஜெபிக்கும்போது இரு காவல் தூதர்கள் அவர் அருகே நிற்பதை கண்டார். அவர்கள் புனித சிசிலியா தலையின் மீது ரோஜா மற்றும் லில்லியால் அலங்கரித்து மகுடம் ஒன்றைச் சூட்டினர். அவருடைய சகோதரரும் திருமுழுக்குப் பெற்றார். இரு சகோதரர்களும் பணக்காரர்களாக இருந்ததால், மறைசாட்சி மரணம் அடைந்த கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உதவி செய்தனர். கிறிஸ்தவர்களுடைய சடலங்களை அவர்கள் பக்தியுடன் புதைத்தனர்.
உரோம் நகரில் கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆளுநன் அல்மாக்கியுஸ் என்பவர் முன் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் பொய்யானக் கடவுளை வழிபட மறுத்தனர். எனவே அவர்கள் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதையறிந்த புனித சிசிலியா, அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் அடக்கம் செய்தார். இதனை அறிந்த ஆளுநன் அல்மாக்கியுஸ் புனித சிசிலியாவையும் கைது செய்தார். புனித சிசிலியா தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால் புனித சிசிலியா அதை மறுத்தார். எனவே சூடான வெந்நீர் ஊற்றி அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவரை ஒன்றும் செய்யவில்லை. பின் தலை வெட்டப்பட்டுக் கொலை செய்ய அவரை அனுப்பினர். மூன்று முறை வெட்டப்பட்டும், முழுவதும் வெட்டப்படாமல் கழுத்து தொங்கிக் கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார் புனித சிசிலியா. அவர் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக மூன்று நாட்களுக்கு பிறகு உரோம் நகரில் 177ம் ஆண்டு இறந்தார் என்று நம்பப்படுகிறது.
அவருடைய கல்லறை 817ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு உரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்றப்பட்டது. 1599ம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் அழியாமல் இருப்பதைக் கண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.