2014-06-13 15:49:14

திருத்தந்தை பிரான்சிஸ், தொமினிக்கன் குடியரசுத் தலைவர் சந்திப்பு


ஜூன்,13,2014. தொமினிக்கன் குடியரசுத் தலைவர் Danilo Medina Sánchez அவர்கள் இவ்வெள்ளி காலை, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் தொமினிக்கன் குடியரசுத் தலைவர் Sánchez.
தொமினிக்கன் குடியரசுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நல்லுறவுகள் நிலவுவதையும், திருஅவை, அந்நாட்டுக்கு ஆற்றிவரும் நற்பணிகள், குறிப்பாக, கல்வி, நலவாழ்வு, பிறரன்பு ஆகிய துறைகளில் செய்துவரும் மதிப்புமிக்க நற்பணிகள் குறித்த திருப்தியும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
தொமினிக்கன் குடியரசில் குடியேற்றதார மக்களுக்கு அரசு செய்துவரும் பணிகள் உட்பட அந்நாட்டைச் சார்ந்த பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
கரீபியன் பகுதி நாடான தொமினிக்கன் குடியரசில் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு 1821ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி இஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.