2014-06-12 15:11:47

மறைசாட்சிகளால் மாறிய வாழ்வு (St. Anthony of Padua)


1220ம் ஆண்டில் ஒருநாள். போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரின், புனித அந்தோணி துறவு மடம், அரசர் அல்போன்சோவின் விருப்பத்தின்பேரில் ஓர் அடக்கச் சடங்குக்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. வட ஆப்ரிக்காவின் மொரோக்கோ நாட்டில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகச் சித்ரவதைசெய்து கொல்லப்பட்ட ஐந்து பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர்களின் தலைகளற்ற, அதேசமயம், துண்டிக்கப்பட்ட நிலையிலிருந்த உடல்களை அடக்கம் செய்யவே அத்தயாரிப்பு. அத்துறவு மடத்துக்கு வந்து சேர்ந்த அந்த உடல்களைப் பார்த்த, Fernando என்ற அகுஸ்தீன் சபைத் துறவி ஒருவர் தானும் கிறிஸ்துவுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய விரும்பி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். 1221ம் ஆண்டில் தனது 26வது வயதில் இச்சபையில் சேர்ந்து அந்தோணி என்ற புதிய பெயரை ஏற்று மொரோக்கோ நாட்டுக்குச் சென்றார். ஆனால் இறைவன் திட்டம் வேறு விதமாக இருந்தது. அங்கு உடல்நலம் குன்றியது. அதனால் மீண்டும் போர்த்துக்கல் நாட்டுக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டார். ஆனால் கப்பல் திசை மாறி இத்தாலியின் சிசிலித் தீவை வந்தடைந்தது. இதற்குப் பின்னர் அந்தோணியாரின் ஆன்மீகமும் இறையியல் அறிவும், திறமைகளும் எங்கும் பரவின. வட இத்தாலியின் பதுவை நகரில் பல அற்புதங்கள் செய்து கோடி அற்புதர் புனித அந்தோணியார் என இவர் அழைக்கப்படுகிறார். ஒருமுறை கில்லார்டு என்ற யூதர், திருநற்கருணையில் இயேசு இல்லை என்று இப்புனிதரிடம் சவால் விட்டார். இதற்குத் தயாரான இப்புனிதர், அந்த யூதரின் கழுதையை நன்கு பட்டினிப் போடச் செய்தார். பின்னர் அதற்குமுன் உணவை வைத்தபோது அந்த விலங்கு, அந்த உணவை உண்ணாமல், அந்தோனியார் காட்டிய திருநற்கருணை முன்பாக மண்டியிட்டு வணங்கியது. ஒருமுறை ஓர் ஏழைப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார் இப்புனிதர். அப்பெண் உணவு தயாரித்தபோது, பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வைத்திருந்த கண்ணாடிப் பாத்திரம் உடைந்துவிட்டது. அதனை ஒட்ட வைத்தார் இப்புனிதர். இவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார். இவரது உரைகளை மீன்களும் கரையில் வந்து கேட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறந்த போதகராகிய புனித அந்தோணியார் தனது 36 வது வயதில் 1231ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பதுவை நகரில் இறந்தார். இவர் இறந்த அடுத்த ஆண்டே புனிதர் என அறிவிக்கப்பட்டார். இவர் இறந்து ஏறக்குறைய 336 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரது உடலைத் தோண்டி எடுத்தபோது அது அழியாமல் இருந்தது. இவரது அழியாத நாவு இன்றும் பதுவை நகர் புனித அந்தோணியார் பசிலிக்காவில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரின் விழா ஜூன் 13.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.