2014-06-12 16:00:38

மனிதர்கள் அன்பு செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள் என்ற செய்தியை நாம் அதிகம் பரப்பவேண்டும் - பேராயர் Vincenzo Paglia


ஜூன்,12,2014. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Piladelphia நகரில் நடைபெறவுள்ள அகில உலக குடும்ப மாநாட்டை ஒரு தருணமாகப் பயன்படுத்தி, மனிதர்கள் அன்பு செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள் என்ற செய்தியை நாம் அதிகம் பரப்பவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்காவின் New Orleans நகரில் தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்க ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றிய குடும்பப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருஅவையின் உயிர்நாடி குடும்பம் என்பதை, குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அகில உலக குடும்ப மாநாடும் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றன என்று பேராயர் Paglia அவர்கள் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு நாடும் குடும்பம் என்ற சொல்லுக்கு பல்வேறு இலக்கணங்கள் கூறினாலும், ஆண் பெண் என்ற இருவரிடையே உருவாகும் நிரந்தர உறவின் அடிப்படையில் எழுவதே குடும்பம் என்பதை, கத்தோலிக்கத் திருஅவை என்றும் கூறி வருகிறது என்று தன் உரையில் வலியுறுத்தினார், பேராயர் Paglia.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்த அகில உலகக் கத்தோலிக்கக் குடும்ப மாநாட்டிற்கு வரும்படி மீண்டும் ஒருமுறை அழைக்கிறோம் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Joseph Kurtz அவர்கள் கூறியதை, அனைத்து ஆயர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர் என்று CNA செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.