2014-06-12 16:05:38

உலகக் கால்பந்து போட்டியையொட்டி, Who should I cheer for? என்ற பெயரில் சமுதாய வலைத்தளம் துவக்கம்


ஜூன்,12,2014. ஜூன் 12, இவ்வியாழனன்று பிரேசில் நாட்டில் ஆரம்பமாகியுள்ள உலகக் கால்பந்து போட்டியையொட்டி, Who should I cheer for? அதாவது, யாருக்கு நான் அதரவு அளிப்பது என்ற பெயரில் சமுதாய வலைத்தளம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த உலக முன்னேற்ற இயக்கம் (World Development Movement) என்ற அமைப்பினர் துவக்கியுள்ள இந்த வலைத்தளத்தில், உலகக் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளின் சமுதாய நிலையை விளக்கும் தரவுகள் தரப்பட்டுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளில், இராணுவத்திற்கும், இராணுவ ஆயுதங்களுக்கும் அரசு செலவிடும் தொகை, அந்நாட்டின் அரசில் பெண்களின் பங்களிப்பு, அந்நாட்டில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்ற அளவு ஆகிய புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டு, எந்த நாட்டிற்கு உங்கள் ஆதரவு உண்டு என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
உலகக் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் 32 நாடுகளில், Costa Rica நாட்டில், இராணுவத்திற்கு செலவாகும் தொகை பூஜ்யம் விழுக்காடு என்றும், அந்நாட்டு அரசில் 39 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன.
இந்நாடுகளின் பட்டியலில், அரசில் 3 விழுக்காடு மட்டுமே கொண்டுள்ள ஈராக் கடைசி இடத்தில் உள்ளது; அதேபோல், இராணுவச் செலவு, கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்ற அளவு ஆகிய தரவுகளைக் கொண்டு, 32 நாடுகள் வரிசையில் அமெரிக்க ஐக்கிய நாடு 29 வது இடத்தில் உள்ளது.
உலகக் கால்பந்து போட்டி வெறும் கேளிக்கை மட்டுமல்ல, அடுத்த ஒரு மாதம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இந்த விளையாட்டு வழியே, சமுதாய ஆய்வையும் மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் "யாருக்கு நான் அதரவு அளிப்பது" என்ற இந்த முயற்சியைத் துவக்கியுள்ளோம் என்று இயக்கத்தின் தலைவர் Ralph Allen அவர்கள் கூறினார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.