2014-06-11 16:12:26

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஜூன்,11,2014. அன்பர்களே, உரோம் நகரில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியிருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்டு அவரின் ஆசீர் பெற்றுச் செல்வதற்காக இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருந்த பயணிகள் வெள்ளத்துக்கு மட்டும் கோடை வெப்பம் பெரிதாகத் தெரியவில்லை. வெயிலின் காரணமாக வத்திக்கான் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த நோயாளிகளை முதலில் சென்று ஆசீர்வதித்து, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்துக்குத் திறந்த காரில் வந்து பயணிகளின் ஆனந்த ஆரவாரத்தில் மூழ்கி தனது இப்புதன் மறைக்கல்விப் போதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. தூய ஆவியின் ஏழு கொடைகள் குறித்த மறைக்கல்வியில், இறையச்சம் என்ற கொடை பற்றி இன்று நோக்கி இந்தத் தலைப்பிலான மறைக்கல்வியை நிறைவு செய்வோம் என, அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி தனது உரையை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, இறையச்சம் என்று சொல்லும்போது கடவுளுக்குப் அஞ்சுதல் என்று அர்த்தமல்ல. ஏனெனில், கடவுள் நம் தந்தை. அவர் நம்மை அன்பு செய்கிறார். அவர் நமது மீட்பை விரும்புகிறார், அவர் நம்மை எப்போதும் மன்னிக்கிறார் என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். இறையச்சம் என்பது, அடிமை சார்ந்த பயம் அல்ல. மாறாக, இது, கடவுளின் பேராற்றலை மகிழ்வோடு உணர்வதாகும். அவரில் மட்டுமே நம் இதயங்கள் உண்மையான அமைதியைக் காணமுடியும் என்பதை நன்றியோடு உணர்வதாகும். ஆண்டவருக்கு அஞ்சுவதன் மூலம், நம் வானகத்தந்தையின் நன்மைத்தனத்திலும், அவரின் அரவணைப்பிலும் நம்பிக்கை வைக்கும் சிறு பிள்ளைகள் போன்று மாறுகிறோம். இயேசுவும் இவ்வாறுதான் நம்மிடம் கேட்கின்றார். இறைவார்த்தைக்கு அன்புடன் பணிவதில் உறுதியாய் இருப்பதற்கு, தூய ஆவியார் நமக்கு உதவி செய்கிறார். இறையச்சம், நம் வாழ்வில் பாவம் இருப்பதை நம்மில் தட்டியெழுப்பும் ஒருவகை “எச்சரிக்கை” மணி போலவும், ஒரு நாள் நாம் அவரது நீதியின்முன் நிற்க வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. மற்றவர்களைப் பயன்படுத்தவும், பணத்திற்காக வாழவும், வெறுமையான இன்பங்களுக்காக மட்டுமெனவும், கடவுளின் பெயரை நிந்திக்கவும், மாசுபட நம்மைக் கையளிக்கவும் நாம் தொடங்கும்போது, இறையச்சம் என்ற இந்த ஆன்மீகக் கொடை நம் உதவிக்கு வந்து, சரியான பாதையில் நம்மை வழி நடத்துகிறது. இறையச்சம் என்ற இக்கொடை, தூய ஆவியின் மற்ற கொடைகளுடன் சேர்ந்து நம்மில் விசுவாசத்தைப் புதுப்பிக்கவும், கடவுளில் மட்டுமே நாம் இறுதி மகிழ்வையும், விடுதலையையும், நிறைவையும் காண முடியும் என்பதை விடாது நமக்கு நினைவுபடுத்தவும் வேண்டுமென்று இன்று செபிப்போம்.
இவ்வாறு இப்புதன் பொது மறைக்கல்விப் போதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தினார். ஆண்டவர் இயேசுவின் அமைதியும், தூய ஆவியின் ஏழு கொடைகளும் அனைவர்மீதும் பொழியப்படுமாறு செபித்து, எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.