2014-06-11 15:58:11

எரிட்ரியாவில் புலம்பெயரும் மக்களின் பிரச்சனைகள் களையப்பட ஆயர்கள் வேண்டுகோள்


ஜூன்,11,2014. எரிட்ரியா நாடு சுதந்திரம் அடைந்ததன் 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
“உனது சகோதரர் எங்கே?” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டு மக்கள் தரமான வாழ்வு தேடி வேறு நாடுகளுக்குக் குடிபெயர்வதில் ஏற்படும் பிரச்சனைகள் களையப்படுமாறு கேட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான எரிட்ரிய மக்கள், நல்லதொரு வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்குச் செல்வதையும், அவ்வாறு செல்லும் பயணத்தில் மத்திய தரைக் கடலில் பலர் இறப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர் ஆயர்கள்.
நீதியும் வேலையும் பேச்சுச் சுதந்திரமும் கிடைக்கும் நாடுகளையும், அமைதி நிலவும் நாடுகளையும் நாடி எரிட்ரியா இளையோர் செல்கின்றனர் என்றும், குடும்ப ஒற்றுமை சிதைவுபட்டிருப்பதே இந்நாட்டினர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இராணுவம், மறுவாழ்வு மையங்கள், சிறைகள், எனக் குடும்பத்தினர் பிரிந்து உல்ளனர் எனவும், வயதானவர்கள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் எனவும் இன்றைய எரிட்ரியக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.
எரிட்ரியா நாடு சுதந்திரம் அடைந்ததன் 23வது ஆண்டு நிறைவு, 2014ம் ஆண்டு மே 25ம் தேதி சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.