2014-06-11 15:55:23

உலகக் கால்பந்து போட்டியின்போது, மனித வர்த்தகம் நடைபெறுவதைத் தடுக்க, Brasilia நகரில், இருபால் துறவியர் அமைப்பின் மாபெரும் பேரணி


ஜூன்,11,2014. ஜூன் 12, இவ்வியாழனன்று பிரேசில் நாட்டில் துவங்கவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின்போது, மனித வர்த்தகம் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இப்புதன் மாலை, Brasilia நகரில், அந்நாட்டின் இருபால் துறவியர் அமைப்பு, மாபெரும் பேரணி ஒன்றை மேற்கொள்கின்றது.
பிரேசில் ஆயர் பேரவையின் ஆதரவுடன், இன்னும் பல்வேறு நாடுகளின் துறவு அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இந்த பேரணியில், "அனைவருக்கும் நீதி கிடைக்க, நேரிய விளையாட்டு விதிமுறைகள் பத்து" என்ற தலைப்பில், பிரேசில் அரசிடம் பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மேமாதம் 19ம் தேதி, São Sebastião என்ற உயர்மறைமாவட்டத்தில் துவக்கப்பட்ட இந்த முயற்சி, பல்வேறு நிலைகளைக் கடந்து, ஜூன் 11ம் தேதி, Brasilia நகரில் பேரணியாக மேற்கொள்ளப்படுகிறது.
"நூறு நாட்கள் அமைதி" என்ற விருதுவாக்குடன் துவக்கப்பட்ட இந்த முயற்சிகள், "துப்பாக்கி, போதைப்பொருள், வன்முறை, இனப் பாகுபாடு அற்ற உலகம்" ஒன்றை உருவாக்குவதில் தீவிரமடைந்துள்ளன என்று பேரணி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.