2014-06-11 15:55:56

Mosul நகரைவிட்டு ஓடிச்செல்லும் மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்காவிடில், பெரியதொரு நெருக்கடி உருவாகும் - பேராயர் Shimoun Emil Nona


ஜூன்,11,2014. ஈராக் நாட்டின் Mosul நகரைவிட்டு ஓடிச்செல்லும் மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்காவிடில், இது பெரியதொரு நெருக்கடியாக மாறும் என்று Mosul கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Shimoun Emil Nona அவர்கள் கூறியுள்ளார்.
புரட்சிக் குழுவினரின் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ள Mosul நகரிலிருந்து கடந்த சில மணி நேரங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு ஓடிவிட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Emil Nona அவர்கள், அந்நகரை இதுவரைப் பாதுகாத்து வந்த இராணுவத்தினரும் தங்கள் சீருடைகளைக் களைந்துவிட்டு, மக்களோடு மக்களாக அந்நகரை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில், இந்நகரில் உருவான பயங்கரச் சூழல் குறித்து ஆசிய செய்திக்கு அளித்துள்ள பேட்டியில், Mosul நகரில் சட்டத்தை நிலைநிறுத்தக்கூடிய காவல் துறையும், இராணுவமும் இல்லாததால், அந்நகரம் அழிவை நோக்கிச் செல்கிறது என்று பேராயர் Emil Nona அவர்கள் கூறியுள்ளார்.
அரசியல், இனம், மதம் என்று பல வழிகளிலும் பிளவுபட்டு நிற்கும் ஈராக் நாட்டிற்கு வலிமை வாய்ந்த ஓர் அரசு உருவாவது மிக அவசரமானத் தேவை என்றும் பேராயர் Emil Nona அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.