2014-06-10 15:40:58

போர்களின்போது பாலியல் வன்முறைகளைத் தவிர்த்து நடக்குமாறு நாடுகளுக்கு அழைப்பு


ஜூன்,10,2014. போர்களின்போது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் இச்செவ்வாயன்று இலண்டனில் தொடங்கியுள்ள உலகளாவிய மாநாட்டை, பிரிட்டன் வெளியுறவு செயலர் William Hague, ஐ.நா. சிறப்புத் தூதர் Angelina Jolie ஆகிய இருவரும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த நான்கு நாள் மாநாட்டில் ஏறக்குறைய 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய Hague அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் போஸ்னியச் சண்டையில் ஐம்பதாயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர், இவர்களில் ஒருவருக்குக்கூட நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதேசமயம், போர்களின்போது பாலியல் வன்முறைகளைத் தவிர்த்து நடக்குமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் Hague.
வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும் இந்த மாநாடு, போர்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக நடக்கும் மிகப்பெரிய மாநாடாக உள்ளது எனச் சொல்லப்பட்டுள்ளது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. தீர்மானத்தை அங்கீகரித்துள்ள எல்லா அரசுகளும், சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அரசு-சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.