2014-06-10 15:42:04

தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூன்,10,2014. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் 27,400 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும், 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரகப் பகுதி மற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளில், 31 ஆயிரம் களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவரும் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, தமிழக கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், பள்ளிக்குச் செல்லாதக் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த கணக்கெடுப்பில், விழுப்புரத்தில், அதிகபட்சமாக, 2,794, காஞ்சிபுரத்தில், 2,225 மற்றும் நீலகிரியில் குறைந்தபட்சமாக, 153 பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என, கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.