2014-06-09 16:00:27

வத்திக்கானில் ஜூன்8,2014ம் நாளன்று நடந்த அமைதி செப வழிபாடு


ஜூன்,09,2014. அன்பு நேயர்களே, ஜூன் 08, 2014, இஞ்ஞாயிறு வத்திக்கான் வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட புனித நாள். தொடர் சகோதரச் சண்டைகள், அப்பாவி மனித உயிர்கள் தொடர்பலி என்று தினமும் தவறாமல் ஊடகங்களின் பக்கங்களில் தடித்த எழுத்துக்களில் இடம்பெற்றுவரும் புனித பூமியின் வரலாற்றுக்கும் ஜூன் 08, 2014 முக்கியமான நாள். இந்நாள் உலகத் தலைவர்களின் கவனத்தைத் தினமும் ஈர்த்துவரும் பாலஸ்தீனத் தலைவரும், இஸ்ரேல் தலைவரும் இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து புனித பூமியில் அமைதி நிலவச் செபித்த நாள். அமைதியை ஏற்படுத்துவதற்கென இவ்விரு தலைவர்களும் முதன்முறையாக ஒன்றிணைந்து செபித்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இது. வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு இதுவரை இடம்பெற்றதில்லை. பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாடுகளில் அமைதியை உருவாக்குவதற்கென ஒன்றிணைந்து இதற்கு முன்னர் செபித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய சிறப்புமிக்க நாளில் உலகில் பல ஆலயங்களில் விசுவாசிகள்கூடி புனித பூமியில் அமைதி நிலவச் செபித்தனர்.
இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கின்ற சாந்தா மார்த்தா இல்லத்துக்கு வருகைதந்த பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்முது அப்பாஸ் அவர்களையும், இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கைகுலுக்கி ஆரத்தழுவி முத்தமிட்டு வரவேற்றார். புனித பூமியில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக, வத்திக்கான் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டுச் செப வழிபாடு, யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களின் மரபுகள்படி நடந்தன. இந்த வழிபாடு அரசியல் நிகழ்வாக இல்லாமல், முற்றிலும் அமைதிக்காகச் செபிக்கும் ஒரு சமய வழிபாடாக இருந்தது. இவ்வழிபாட்டில், முதலில் இறைவனின் படைப்புக்கு நன்றிசெலுத்தினர். பின்னர், வாழ்வில் தாங்கள் செய்யத் தவறிய நற்செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சினர். பின்னர் புனித பூமியில் அமைதிக்காக இறைவனிடம் விண்ணப்பித்தனர். இவற்றை திருப்பாக்களாக அனைவரும் செபித்தனர். இஸ்ரேல் அரசுத் தலைவர் பெரெஸ், பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸ், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய மூன்று தலைவர்களுடன் கான்ஸ்ட்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, எருசலேம் முதுபெரும் தந்தை தியோபிலுஸ், இன்னும், கர்தினால்கள், யூதமத ரபிகள், இசுலாமியப் பிரதிநிதிகள் எனப் பலர் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியினால் நடந்த இந்நிகழ்வில், அரசியல் கலப்பு என்பதே இல்லை. மாலை 7 மணிக்குத் தொடங்கிய இச்செபவழிபாடு 1 மணி, 45 நிமிடங்கள் இடம்பெற்றது. திருப்பாக்கள் செபிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அரசுத்தலைவர்களை வரவேற்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
RealAudioMP3 சண்டையை நடத்துவதற்கு தேவைப்படும் துணிச்சலைவிட அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகத் துணிச்சல் தேவை. சண்டையைப் புறக்கணித்து சந்திப்பு நடத்துவதற்கும், வன்முறையை விலக்கி உரையாடலுக்கும், காழ்ப்புணர்வர்களைத் தவிர்த்து பேச்சுவார்த்தைக்கும், கோபமூட்டும் செயல்களை ஒதுக்கி உடன்பாட்டுச் செயல்களை மதிப்பதற்கும், நேர்மையற்ற செயல்களை விலக்கி நேர்மையான செயல்களுக்கும் “ஆம், ஆகட்டும்” என்று சொல்வதற்குத் துணிச்சல் அவசியம். நாம் செய்ய வேண்டுமென்று இறைவன் நமக்குக் கொடுத்துள்ள பொறுப்புக்களை, நம் மனச்சாட்சிகள் மற்றும் நம் மக்கள் முன்னிலையில் புறக்கணிக்க முடியாது. அமைதியைக் கொணர வேண்டுமென்ற ஆணையை நாம் பெற்றுள்ளோம், அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தொடரும் வெறுப்பையும் வன்முறையையும் “சகோதரர்” என்ற ஒரே சொல்லால் மட்டுமே தகர்க்க வேண்டுமென்ற ஆணையைப் பெற்றுள்ளோம். இந்தச் சொல்லை நாம் சொல்வதற்கு, நம் கண்களை இறைவனை நோக்கி எழுப்ப வேண்டும். ஒரே தந்தையின் பிள்ளைகளாக, நம்மை நாம் ஏற்க வேண்டும். அன்பு அரசுத் தலைவர்களே, நீங்கள் இங்கு இருப்பது, ஆபிரகாமின் பிள்ளைகள் என, நீங்கள் அர்ப்பணிக்கும் சகோதரத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றது. வரலாற்றின் ஆண்டவராகிய இறைவனில் நம்பிக்கை வைப்பதன் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. இன்று இறைவன் நம் அனைவரையும் சகோதரர்களாக நோக்கி, தமது வழிகளில் நம்மை வழிநடத்த விரும்புகிறார். நமது சக்தியால் மட்டும் புனித பூமிக்கு அமைதியைக் கொண்டுவர முடியாது. இறைவனின் உதவி தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அதனை நம்புகிறோம், அதனாலே இங்கு நாம் கூடியிருக்கிறோம். இறைவன் மட்டுமே புனித பூமிக்கு அமைதியைக் கொண்டுவர முடியும்.
புனித பூமியில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தனக்கிருக்கும் தணியாத் தாகத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செப வழிபாட்டில் உரையாற்றிய இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும RealAudioMP3 ், புனித பூமியில் வாழும் நம் குழந்தைகளுக்கு அமைதியைக் கொண்டுவருவதற்கு நமக்குள் அதிகாரம் இருக்கின்றது. அமைதியைக் கொண்டுவருவது நமது கடமை, இது நம் பெற்றோரின் புனிதப் பணி என்று கூறினார். மதங்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே, சமூகங்களுக்கிடையே, மனிதர்க்கிடையே அமைதி நிலவுவதற்குத் அழைப்புவிடுக்கும் திருத்தந்தையே, நிறைந்த நம்பிக்கையும் எதிர்நோக்கும் சுடர்விடுகின்ற உள்ளத்தை நெகிழவைக்கும் இந்நேரத்தில், நாங்கள் எல்லாரும் உம்முடன் இணைகிறோம். உண்மையான அமைதி விரைவில், துரிதமாய் நம் வழி வருவதாக இருக்கட்டும், நாம் அனைவரும் இறைவன் முன்னர் சமம். நாம் எல்லாரும் மனிதக் குடும்பத்தின் அங்கம். அமைதியின்றி நாம் முழுமையடைய முடியாது. அமைதி எளிதாக வராது. அதனை அடைவதற்கு நமது முழு சக்தியையும் பயன்படுத்தி உழைக்க வேண்டும். தியாகம் அல்லது விட்டுக்கொடுத்தல் தேவைப்பட்டால்கூட அதனை வழங்கி விரைவில் அமைதியை அடைவோம். நான் போரை அனுபவித்துள்ளேன். அமைதியை சுவைத்துள்ளேன். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், பெற்றோரையும் சிறாரையும் நான் ஒருபோதும் மறவேன். என் வாழ்நாள் முழுவதும் அமைதிக்கான செயல்களை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். அமைதியை ஏற்படுத்த நாம் ஒருமித்த கரங்களை இணைப்போம் என்றும் இஸ்ரேல் அரசுத் தலைவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று நடந்த அமைதிக்கான செப வழிபாட்டில் உரையாற்றிய பாலஸ்தீன அரசுத்தலைவர் மஹ்முது அப்பாஸ் அவர்கள், திருத்தந்தையின் வார்த்தைகளுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுவதாகத் தெரிவித்தார். நமக்கும், நம் அடுத்தவர்களுக்கும் அமைதியை நாம் விரும்புகிறோம். இறைவன் நம் செபங்களைக் கேட்பாராக. எருசலேமில் அமைதி ஏற்படுமானால் உலகில் அமைதி ஏற்படும் என்ற புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகளயும் குறிப்பிட்டுப் பேசினா RealAudioMP3 ர் பாலஸ்தீன அரசுத்தலைவர் அப்பாஸ்.
இச்செப வழிபாட்டில், புனித பூமியின் மகளும் நம் தாயுமான அன்னைமரியிடம் செபிப்போம் என்று சொல்லி அமைதிக்காக உருக்கமாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதியின் ஆண்டவரே, RealAudioMP3 எங்கள் ஆயுதங்களின் பலத்தாலும், எங்கள் சொந்த சக்திகளாலும் சண்டைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பல தடவைகளில், பல ஆண்டுகளாக முயற்சித்துள்ளோம். வெறுப்பையும் இருளையும் எத்தனை தருணங்களில் நாங்கள் அனுபவித்துள்ளோம். எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. எத்தனை உயிர்கள் சிதைக்கப்பட்டுள்ளன. எத்தனை மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர். ஆயினும், எங்களின் முயற்சிகள் வீணாகின. இப்பொழுது ஆண்டவரே, எமக்கு உதவி செய்ய வாரும். எமக்கு அமைதியை அருளும், அமைதியைக் கற்றுத்தாரும், அமைதியின் பாதையில் எங்களை வழிநடத்தும். எம் கண்களையும் இதயங்களையும் திறந்தருளும். “இனிமேல் போர் ஒருபோதும் வேண்டாம், போரினால் எல்லாம் இழக்கப்பட்டுள்ளன” என்று சொல்வதற்குத் துணிச்சலைத் தாரும். அமைதியை அடைவதற்குத் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுப்பதற்கானத் துணிச்சலை எம் இதயங்களில் திணித்தருளும்.
ஆபிரகாமின் கடவுளே, நாங்கள் சகோதர, சகோதரிகளாக வாழுமாறு படைத்தீர். அவ்வாறு வாழவே எம்மை அழைத்துள்ளீர். அமைதியின் கருவிகளாக வாழ்வதற்குத் தினமும் சக்தி தாரும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் சகோதர, சகோதரிகளாக நாங்கள் நோக்கச் செய்யும். போரின் கருவிகளை அமைதிக்காகவும், அச்சுறுத்தும் குழப்பங்களை நம்பிக்கையாகவும், சண்டையை மன்னிப்பாகவும் மாற்றுமாறு எம்மை மன்றாடும் எம் குடிமக்களின் வேண்டுதல்களை நாங்கள் கேட்கச் செய்யும்.

எம்மில் நம்பிக்கைச் சுடரைத் தூண்டிவிடும். அதன்மூலம், நாங்கள் பொறுமை மற்றும் விடாஉறுதியுடன் உரையாடலுக்கும் ஒப்புரவுக்கும் எம்மைக் கையளிப்போம். இவ்வாறு செய்வதன் வழியாக அமைதி வெற்றியடையும், பிரிவினை, வெறுப்பு, போர் ஆகிய சொற்கள் ஒவ்வொரு மனித இதயத்திலிருந்து ஒழிந்துபோகும். ஆண்டவரே, எம் வன்முறை நாவுகளையும் கரங்களையும் ஒழித்துக்கட்டும். எம் இதயங்களையும் மனங்களையும் புதுப்பியும். இதனால் எம்மை எப்போதும் ஒன்றுசேர்க்கும் வார்த்தையாக சகோதரர் என்பது இருக்கும். எமது வாழ்வுமுறையும் எப்போதும் ஷாலோம், அமைதி, சலாம் என்று இருக்கும், ஆமென்.
இவ்வாறு புனித பூமியில் அமைதிக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை கூறியுள்ளது போன்று மன்னிப்பதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும் துணிச்சல் தேவை. இயேசு கிறிஸ்து பிறந்த புனித பூமியில் அமைதி நிலவ நாமும் திருத்தந்தையுடன் இணைந்து செபிப்போம். உள்ளத்தில் உண்மையான அமைதியை அனுபவித்து நாம் இடங்களில் அமைதியின் கருவிகளாகச் செயல்படுவோம். இயேசு சொன்னார் - அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியதே என்று.







All the contents on this site are copyrighted ©.