2014-06-09 16:54:13

திருத்தந்தை பிரான்சிஸ் - விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட்டுக்கள் நடத்தப்படுவதுபோல், வாழ்க்கையும் விதிமுறைகளுடன் செல்லவேண்டும்


ஜூன்,09,2014. தெருக்களில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்கள் வாழ்வைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய விளையாட்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்துக்கு முன் அமைந்துள்ள சாலையில், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இச்சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இத்தாலியக் கத்தோலிக்கக் கழகத்தின் இளையோரால் 1944ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, பெரும்பாலும் பங்குத் தளங்களிலும், மற்ற துறவுச் சபையினர் கண்காணிப்பிலும் வளர்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கோவில் கோபுர நிழலில் உருவான இவ்வமைப்பு, திருஅவையின் விழுமியங்களைத் தாங்கிச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வாழ்க்கையும் ஒருவகையில் விளையாட்டுதான் என்பதைக் கூறியத் திருத்தந்தை, விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட்டுக்கள் நடத்தப்படுவதுபோல், வாழ்க்கையும் விதிமுறைகளுடன் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைவரும் இணைந்து விளையாடும்போதே வெற்றி கிட்டுமேதவிர, ஒருவர் தன் சுயநலனுக்காக விளையாடும்போது, அவரது அணி வெற்றிபெறுவது கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வாழ்விலும் அனைவரோடும் இணைந்து செயலாற்றுவதே வெற்றியைத் தரும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.