2014-06-09 16:52:17

திருத்தந்தை பிரான்சிஸ் - 'பேறுபெற்றோர்' வாக்கியங்கள், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைச் சாரம்


ஜூன்,09,2014. இயேசுவின் மலைப்பொழிவில் வழங்கப்பட்ட 'பேறுபெற்றோர்' வாக்கியங்கள், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைச் சாரம் என்றும், இவ்வுலகம் காட்டும் வழிகளுக்கு முற்றிலும் மாறியவை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள மழைப்பொழிவு வார்த்தைகளை மையப்படுத்திப் பேசினார்.
இஞ்ஞாயிறு மாலை வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்ட அமைதி செப முயற்சிகள் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இம்முயற்சி, உலகப் போக்குகளுக்கு முற்றிலும் மாறானவை என்றும், இத்தகையச் செயல்பாடுகளே இயேசு தன் மலைப்பொழிவின் வழியே நம்முன் வைக்கும் சவால்கள் என்றும் எடுத்துரைத்தார்.
கனிவுள்ளம் கொண்டோரை இவ்வுலகம் மதியிழந்தோர் என்று சுட்டிக்காட்டும் வேளையில், இயேசு, "கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்" என்று துணிவுடன் கூறுகிறார் என்பதை, திருத்தந்தை சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
மன்னிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு பெரும்படையைச் சேர்ந்த நாம், மற்றவர்களை மன்னிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இவ்வகையில், மன்னிக்கப்பட்டவர்கள் என்ற படை மேலும் எண்ணிக்கையில் வளரும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மேலும், ஒருவரிடம் நாம் கூற விழைவதை அவரிடம் நேரடியாகச் சொல்லவும், அவருக்குப் பின்புறமாகப் புரணி பேசாதிருக்கவும் நாம் முயல்வோமாக என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திங்கள் Twitter செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.