2014-06-09 16:53:10

திருத்தந்தை பிரான்சிஸ் - திருமறைக் கோட்பாடுகளைக் கற்றுத்தருவதைவிட, தூய ஆவியார் நமக்கு வாழ்வைக் கற்றுத்தருகிறார்


ஜூன்,09,2014. தூய ஆவியார் நமக்குக் கற்றுத் தருகிறார், நமக்கு நினைவுறுத்துகிறார், நம்மை இறைவனுடன் உரையாட வைக்கிறார் என்ற மூன்று கருத்துக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் வருகைப் பெருவிழாவின் மறையுரையை வழங்கினார்.
தூய ஆவியார் வருகைப் பெருவிழா திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலாயத்தில், ஜூன் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்" என்ற விவிலிய வார்த்தைகளுடன் தன் மறையுரையைத் துவக்கினார்.
திருமறைக் கோட்பாடுகளைக் கற்றுத்தருவதைவிட, தூய ஆவியார் நமக்கு வாழ்வைக் கற்றுத்தருகிறார் என்பதை திருத்தந்தை தன் முதல் எண்ணமாகப் பகிர்ந்தார்.
இயேசுவின் வார்த்தைகளை நமக்கு மீண்டும், மீண்டும் நினைவுறுத்தி, அவ்வார்த்தைகளை நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவதும் தூய ஆவியாரின் முக்கியச் செயல்பாடு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவனுடன் செபத்தில் இணையவும், அவரை 'அப்பா' என்று அழைக்கவும் நமக்குக் கற்றுத்தருவது தூய ஆவியாரே என்று கூறியத் திருத்தந்தை, இறைவனை 'அப்பா' என்று அழைப்பது வெறும் வார்த்தை அல்ல, அந்த ஒரு வார்த்தையின் வழியாக நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை நமக்கு நினைவுறுத்துவது தூய ஆவியாரின் பணி என்றும் கூறினார்.
அன்னைமரியா, வானதூதரிடம் நற்செய்தியைப் பெற்றதும், தன் உறவினரான எலிசபெத்திற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டதைப்போல், திருஅவையும் தூய ஆவியாரைப் பெற்ற முதல் நாள் துவங்கி, பணியாற்றப் புறப்பட்டது என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.