2014-06-09 16:53:29

திருத்தந்தை பிரான்சிஸ் - ஆச்சரியங்களின் ஊற்று இறைவன் என்பதை, தூய ஆவியார் தன் வருகையினால் நிரூபித்தார்


ஜூன்,09,2014. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நமது சுகமான வாழ்விலிருந்து வெளியேறும் வகையில் நம்மைச் சங்கடப்படுத்தும் திருஅவை, தூய ஆவியாரின் வருகையால் உருவானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செய்தி வழங்கியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசுவின் பாடுகள், மரணம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, சீடர்கள் முற்றிலும் தோல்வியுற்றவர்களாகக் காணப்பட்டனர்; அவர்கள் வழியே இனி எதுவும் நிகழாது என்ற முடிவுக்கு இவ்வுலகம் வந்தது என்பதைக் கூறியத் திருத்தந்தை, இந்தச் சீடர்களுக்கு இவ்வுலகையே மாற்றும் சக்தியை தூய ஆவியார் வழங்கினார் என்பதை எடுத்துரைத்தார்.
ஆச்சரியங்களின் ஊற்று இறைவன் என்பதை, தூய ஆவியார் தன் வருகையினால் நிரூபித்தார் என்றும், திருஅவை வழியே இந்த ஆச்சரியங்கள் தொடர்ந்து வந்துள்ளன என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தினார்.
ஆச்சரியங்களைத் தராத திருஅவை, நோயுற்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியத் திருஅவை என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆச்சரியங்கள் தருவதும், பழகிப்போன வாழ்வில் சுகம் காணாதவாறு நம்மைச் சங்கடப்படுத்தி, வெளியேற வைப்பதும் திருஅவையின் முக்கியச் செயல்பாடுகள் என்று தன் செய்தியில் விளக்கினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு மாலை, பாலஸ்தீன அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவரும் வத்திக்கானில் தன்னுடன் மேற்கொள்ளவிருக்கும் அமைதி செப முயற்சியைக் குறித்து மக்களிடம் கூறியத் திருத்தந்தை, இந்த முயற்சி நல்ல பலன்களை தர அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை வேண்டுவோம் என்று தன் அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.