2014-06-09 16:54:51

கர்தினால் லூர்துசாமி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில், 20,000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு


ஜூன்,09,2014. உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்காகவும் ஆசியத் திருஅவைக்காகவும் அயராது உழைத்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பு என்று மும்பைப் பேராயர், கர்தினால் Oswald Gracias அவர்கள் கூறினார்.
ஜூன் 2, கடந்த திங்களன்று உரோம் நகரில் இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் அடக்கத் திருப்பலியும், இறுதிச் சடங்குகளும், ஜூன் 9 இத்திங்களன்று புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராலயத்தில் நிறைவேற்றப்பட்டன.
இத்திருப்பலியில் கலந்துகொண்ட கர்தினால் Gracias அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், மிக இளவயதில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற அருள் பணியாளர் என்ற பெருமைபெற்ற கர்தினால் லூர்துசாமி அவர்கள், தற்போது, இந்தியத் திருஅவைக்காகவும், ஆசியத் திருஅவைக்காகவும் சக்திமிகுந்த வகையில் பரிந்துபேச இறைவனிடம் சென்றுள்ளார் என்று கூறினார்.
இந்தியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pnnachio அவர்கள் தலைமையில் நடைபெற்ற அடக்கத் திருப்பலியில், மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias, ராஞ்சி பேராயர் கர்தினால் Telespore Toppo, எர்ணாகுளம் சீரோ மலபார் கர்தினால் George Alancherry ஆகியோருடன், புதுச்சேரி கடலூர் பேராயர் அன்டனி அனந்தராயர் மற்றும் ஏனைய ஆயர்கள், அருள் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
உரோம் நகரிலிருந்து விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல், சனிக்கிழமை இரவு புதுச்சேரியை அடைந்தது என்றும், இஞ்ஞாயிறு முழுவதும் பேராலயத்திற்கு அருகே உள்ள பள்ளியில் அது மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்தது என்றும் உயர் மறைமாவட்டச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
புதுச்சேரி ஆளுநர் Virendra Kataria, புதுச்சேரி முதல்வர் Rangasamy உட்பட, பல அரசியல் தலைவர்களும், வேறு பல தலைவர்களும் கர்தினால் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர் என்றும், கர்தினால் மறைவையொட்டி, திங்களன்று புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இவ்வாண்டு தன் 90வது வயதை நிறைவு செய்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களின் உடல், புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அமல அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில், 20,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது..

ஆதாரம் : AsiaNews / Ind.Express








All the contents on this site are copyrighted ©.