2014-06-09 16:54:48

Loretto புனிதத் தலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட புனித நடைப்பயணத்திற்கு திருத்தந்தையின் ஆசீர்


ஜூன்,09,2014. தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா திருவிழிப்பு நாளன்று, இத்தாலியின் Loretto திருத்தலம் நோக்கி, இளையோர் மேற்கொள்ளும் புனித நடைப்பயணத்தை தான் அசீர்வதிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மரியன்னை வாழ்ந்த நாசரேத்து இல்லத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய Loretto என்ற புனிதத் தலத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் புனித நடைப்பயணம், இவ்வாண்டு 36வது முறையாக மேற்கொள்ளப்பட்டபோது, இந்த முயற்சியில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியிலும் நடுத்தரமான, ஏனோ தானோவென்ற எண்ணத்துடன் செயல்படாமல், அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட, திருத்தந்தை இளையோரை ஊக்குவித்தார்.
இளையோரின் கனவுகளைப் பறிக்கும்வண்ணம் அவர்கள் வாழ்வில் மனத்தளர்ச்சியை உருவாக்குவோரிடம், இளையோர் தங்களை இழக்கக்கூடாது என்றும் திருத்தந்தை தன் தொலைப்பேசி செய்தியில் வலியுறுத்தினார்.
இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்ட அமைதி செப முயற்சி குறித்து தன் செய்தியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்த அமைதி முயற்சிக்கு, இளையோரின் செபங்கள் இன்றியமையாதவை என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.