2014-06-07 15:18:33

புனித பூமியின் அமைதிக்காக, திருத்தந்தை பிரான்சிஸ், பாலஸ்தீனா அரசுத் தலைவர், இஸ்ரேல் அரசுத்தலைவர் இணைந்து செபம்


ஜூன்,07,2014. புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாலஸ்தீனிய அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து வத்திக்கானில் இஞ்ஞாயிறு மாலை செபிக்கவுள்ளனர்.
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்துக்கு ஞாயிறு மாலை 6.30 மணிக்கு வருகை தரும் இவ்விரு தலைவர்களையும் வரவேற்கும் திருத்தந்தை, வத்திக்கான் தோட்டத்தில் இச்செப வழிபாட்டுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு இவ்விருவருடன் செல்வார். இவர்களுடன் கான்ஸ்ட்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும் செல்வார்.
"அமைதியைக் கட்டியெழுப்புவது கடினம்தான்; ஆனால், அமைதியின்றி வாழ்வது பெரும் கொடுமை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அண்மையப் புனிதப் பூமிப் பயணத்தில் கூறியதை ஏற்று இத்தலைவர்கள் அமைதிக்கான இச்செப வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர்.
படைப்புக்காக இறைவனைப் புகழ்தல், மன்னிப்பை இறைஞ்சுதல், அமைதிக்காகச் செபித்தல் ஆகிய மூன்று நிலைகளில், யூத, கிறிஸ்தவ, இசுலாமிய மரபுகளின்படி இந்தச் செப வழிபாடு நடைபெறும்.
இந்தச் செப வழிபாடு அரசியல் நிகழ்வாக நோக்கப்படக் கூடாது என்று வத்திக்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய பகுதிகளிலுள்ள பல்வேறு சமயக் குழுக்களின் ஏறக்குறைய இருபது பிரதிநிதிகளும், இன்னும் பிற திருஅவைப் பிரமுகர்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்களும், புனிதபூமி காவலர் பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் Pierbattista Pizzaballa அவர்களும் இந்த நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்களிடம் இவ்வெள்ளியன்று விளக்கினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய, பெத்லகேம் உட்பட உலகின் பல பாகங்களில் செப வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.