2014-06-07 14:21:33

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு. சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகையும், அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இவ்விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே இவ்விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இவ்விழாக்களில் முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

‘கொண்டாட்டம்’ என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மாற்றங்களை உருவாக்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?.. இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.

கொண்டாட்டங்களைப் பற்றிச் சிந்திக்கும் வேளையில், கொண்டாடமுடியாத சில நாட்களைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். கொண்டாடமுடியாத ஒரு நாளை நாம் சென்ற ஞாயிறு சிந்தித்தோம். சென்ற வாரம், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் காட்டிலும், அதே வாரம், ஜூன் 5ம் தேதி, வியாழனன்று, உலகச் சுற்றுச்சூழல் நாள் என்ற காரணத்தால், சுற்றுச்சூழலைப்பற்றி நமது சிந்தனைகள் அதிகம் இருந்தன. அந்த நாளை நாம் கொண்டாட முடியாத அளவு சுற்றுச்சூழலுக்கு நாம் ஆபத்தை விளைவித்துள்ளோம் என்பதைச் சிந்தித்தோம்.
இந்த ஞாயிறன்றும் இரு தருணங்கள், இரு காரணங்கள் இணைந்துவந்து, நமது கவனத்தை ஈர்க்கின்றன. இவ்விரு காரணங்களில் ஒன்றை நாம் கொண்டாட முடிகிறது; மற்றொன்றைக் கொண்டாட முடியாமல் நம் மனம் சங்கடப்படுகின்றது. இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இதை நாம் கொண்டாட முடியும். சென்ற வாரம் வியாழனைப் போலவே, இந்த வாரம் வியாழனன்று நாம் சந்திக்கும் ஒரு நாள் கொண்டாடமுடியாத நாள். ஜூன் 12ம் தேதி - குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாள் (World Day Against Child Labour). இந்நாளைக் கொண்டாட மனம் சங்கடப்படுகிறது. இவ்விரு நாட்களும் இணைந்து வந்திருப்பதை இறைவன் நமக்குத் தந்துள்ள அருள் நிறைந்த ஒரு தருணமாகக் காணலாம்.
தூய ஆவியாரின் வருகையை, திருஅவையின் பிறந்த நாளென்றும் கொண்டாடுகிறோம். பெந்தகோஸ்து நாளன்று புதிதாய்ப் பிறந்தத் திருஅவை, தன் குழந்தைப் பருவத்தில் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, திருஅவை என்ற குழந்தையின் பிறந்தநாள், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாளையொட்டி வந்திருப்பது, குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, அதுவும் போராட்டங்களால் சூழப்பட்டக்
குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, நமக்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்புதானே! இவ்விரண்டையும் இணைத்து நாம் சில சிந்தனைகளை எழுப்ப முயல்வோம், பாடங்களைப் பயில முயல்வோம்.

ILO என்றழைக்கப்படும் அகில உலகத் தொழில் நிறுவனம் (International Labour Organisation) 2002ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியை குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளாக அறிவித்தது. குழந்தைத் தொழில் என்ற அவலத்தை ஒழிக்கவேண்டும் என்பதை மனிதகுலம் புரிந்துகொள்ள, இருபது நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டதே என்பதை எண்ணி நாம் வெட்கப்படவேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இந்த உலக நாளை உண்டாக்கிய பிறகும் இந்த அவலம் இன்னும் உலகிலிருந்து மறையவில்லையே என்று நாம் வேதனைப்பட வேண்டும்.

மனித வரலாற்றில், குழந்தைகள் எப்போதும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். குடிசைத் தொழில் அல்லது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் இது குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல. அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.
தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு மூலதனமான இயந்திரங்கள் மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களுக்குச் சேவை செய்வதற்கு பெரியவர், சிறியவர் என்று எல்லாரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
சிறுவர்கள், ஆலைகளில், தொழிற்சாலைகளில் ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சிறுவர்களில் பலர் அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போரில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில் உயிரையும் இழந்தனர்.
சிறுமிகள், பெரும் செல்வந்தர்கள் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து உழைக்கவேண்டிய கட்டாயம் இச்சிறுமிகளுக்கு. இவர்களில் பலர் இச்செல்வந்தர்களின் உடல் பசியை வெறும் உணவால் மட்டுமல்ல தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள் இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.
நான் இங்கே பட்டியலிட்ட இந்த அவலங்கள் எங்கோ எப்போதோ நடந்து முடிந்துவிட்ட கதை, வரலாறு என்று எண்ணவேண்டாம். இன்றும் இத்தகைய அவலங்கள் தொடர்கின்றன. இதைவிட ஒரு பெரும் கொடுமை, கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. குழந்தைகளும், சிறுவர்களும் இராணுவங்களில், போர் சூழல்களில் பயன்படுத்தப்படுத்தப்படும் கொடுமை.

குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி, இராணுவங்களில் பயன்படுத்தப்படும் சிறுவர், சிறுமிகளைப் பற்றி புள்ளிவிவரங்கள், கவிதைகள், கதைகள் என்று பல ஆயிரம் முறை கேட்டிருக்கிறோம். இன்று அவற்றை மீண்டும் நமது நினைவுக்குக் கொண்டு வருவோம். குழந்தைத் தொழிலாளர்களை வெறும் எண்ணிக்கையாய் பார்க்காமல், வருங்காலத்தின் நம்பிக்கையாய்ப் பார்க்க நமது மனதில் தூய ஆவியார் தனது உள்ளொளியைத் தர வேண்டும் என்று செபிப்போம்.
தூய ஆவியாரின் திருநாளை, திருஅவையின் பிறந்த நாளை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடமுடியும். அதேபோல், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளையும் ஒரு திருநாளாக நாம் கொண்டாடமுடியும். எப்போது? உலகில் குழந்தைத் தொழிலாளிகள், சிறார் படைவீரர்கள் என்று யாரும் இல்லாதபோது, ஜூன் 12ம் தேதியையும் நாம் நெஞ்சுயர்த்தி ஒரு திருநாளாகக் கொண்டாடமுடியும். அதுவரை இக்குற்ற உணர்வுகளால் பாரமான மனதோடு தலை குனிந்தே நாம் வாழவேண்டும். குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் புரிவோரின் கழுத்தில் பாரமான ஏந்திரக் கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்துவது நலம் என்று (மத். 18:6; மாற். 9:42; லூக். 17:2) இயேசு கூறியது நினைவிருக்கலாம். நம் பாரமான மனங்களே ஓர் எந்திரக் கல்லாக மாறி, நம் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
திருஅவை என்ற குழந்தை, பிறந்த நாள் முதல் சந்தித்த பிரச்சனைகளில் எல்லாம் தூய அவியாரின் துணை இருந்ததால், அவர் தந்த ஞானம், அறிவு, திடம், வலிமை என்ற பல அன்புக் கொடைகளும் திருஅவை என்ற இக்குழந்தையை இதுநாள் வரை வழிநடத்தி வந்துள்ளன.
அதேபோல், உலகெங்கும் துன்புறும் குழந்தைத் தொழிலாளிகளை விடுவிக்கும் வழிகளைச் சிந்திக்க தூய ஆவியார் ஞானத்தை நமக்குத் தரவேண்டும்... அவ்வழிகளை நடைமுறைப்படுத்த, மனவலிமையையும் அவர் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, ஒரு சிறப்பு மன்றாட்டுடன் நமது சிந்தனைகளை நிறைவு செய்வோம். பாலஸ்தீன நாட்டுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் (Mahmoud Abbas) அவர்களையும், இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் (Shimon Peres) அவர்களையும், வத்திக்கானுக்கு வந்து தன்னுடன் இணைந்து அமைதிக்காகச் செபிக்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுத்த அழைப்பும், அந்த அழைப்பை இருநாட்டுத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதும், புனித பூமிப் பயணத்தில் திருத்தந்தை மேற்கொண்ட ஒரு நம்பிக்கை தரும் செயல்பாடாக அமைந்தது. இந்த அழைப்பினையொட்டி இவ்விரு நாட்டுத் தலைவர்களும் ஜூன் 8, இஞ்ஞாயிறன்று வத்திக்கானுக்கு வருகை தருகின்றனர். அமைதி குலைந்து வாடும் இவ்விரு நாடுகளையும் அமைதியில் வாழவைக்க, இந்த செப முயற்சி, நல்ல பலன்களைத் தரவேண்டுமென்று, தூய ஆவியாரை உருக்கமாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.