2014-06-06 15:41:26

திருத்தந்தை பிரான்சிஸ் : காவல்துறையினரின் பணி பிறர் சேவையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்


ஜூன்,06,2014. காவல்துறையினர் பணிபுரிவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளனர்; இவர்களின் பணி பிறர்சேவையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய இராணுவ காவல்துறை உருவாக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, இந்தக் காவல்துறை உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் என ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இவ்வெள்ளி நண்பகலில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் அழைப்பு குறித்து விளக்கினார்.
காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே தோழமை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு என்ற தொடர்பு இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, காவல்துறையினர், ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோரிடம் அக்கறை காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணிக்கு, எப்பொழுதும் தயாராக இருப்பதும், பொறுமையும், தியாகமும், கடமையுணர்வும் அவசியம் என்றும் உரைத்த திருத்தந்தை, நாத்சி வன்கொடுமையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தனது வாழ்வைத் தியாகம் செய்த 23 வயது இறையடியார் Salvo d'Acquisto அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்றும் கூறினார்.
இந்தக் காவல்துறையினர் தேசிய எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மனித மாண்பையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும் உழைப்பதையும் பாராட்டி, அவற்றைத் தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
எண்ணற்ற கொடூரம் நிறைந்த முதல் உலகப் போர் நடந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, Gorizia மாநிலத்தின் Redipuglia இராணுவ நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 13ம் தேதி சென்று, போரில் இறந்த வீரர்களுக்காகச் செபிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய இராணுவ காவல்துறை, 1814ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் 1,17,943 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். முதலில் சர்தீனிய அரசில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, பெனித்தோ முசோலினியின் வீழ்ச்சிக்கும் காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.