2014-06-06 15:43:04

ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையும் குழந்தைகள், ஒரு மனிதாபிமான சவால் - அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்


ஜூன்,06,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, ஆவணங்கள் ஏதுமின்றி வந்து சேரும் சிறுவர், சிறுமியரை, அரசுத் தலைவர் ஒபாமா அவர்களும், அவரது அரசும் பாதுகாக்க வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆவணங்கள் ஏதுமின்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழையும் குழந்தைகள், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் கருதப்பட வேண்டிய ஒரு சவாலாக மாறிவருகின்றனர் என்று ஆயர்களின் விண்ணப்பம் கூறியுள்ளதாக Fides செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்திய அரசும், இச்சிறுவர், சிறுமியர் புகலிடம் தேடிச் செல்லும் மாநில அரசுகளும் இணைந்து, இந்தச் சவாலை எதிர்கொள்ளவேண்டும் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான, ஆயர் Eusebio Elizondo Almageur அவர்கள் கூறியுள்ளார்.
இம்மாதம் 3ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைக் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கடந்த 20 மாதங்களில், ஆவணங்கள் ஏதுமின்றி, நாட்டிற்குள் நுழைந்துள்ள 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை, 71,000த்துக்கும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.