2014-06-05 16:19:33

புனிதரும் மனிதரே : சொத்துத் தகராறு மாற்றிய வாழ்வு(St Sabas)


சபாஸ் சிறுவனாக இருந்தபோது இவரது தாயின் சகோதரரும், தந்தையின் சகோதரரும் இவரது சொத்துக்காக வழக்குத் தொடர்ந்ததைக் கண்டார். காரணம், சபாசின் தந்தை புகழ்பெற்ற இராணுவ அதிகாரி. இவர் பாலஸ்தீனாவிலருந்து, எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவுக்குப் படையில் பணி செய்வதற்காகச் செல்ல வேண்டியிருந்தது. தன்னுடன் தனது மனைவியையும் அழைத்துச் சென்றார். அதனால் தனது மகன் சபாசை தாய்வழி மாமாவிடம் ஒப்படைத்ததோடு, அவர்களது சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். ஆனால் சபாசின் அத்தை சிறுவன் சபாசை மிகவும் கொடுமைப்படுத்தினார். எட்டு வயதேயான சிறுவன் சபாஸ் கொடுமை தாங்க முடியாமல் மூன்று ஆண்டுகள் கழித்து இவரது தந்தையின் சகோதரரிடம் சென்றார். அவ்வீட்டிலாவது அமைதியில் வாழலாம் என்று நினைத்தார். ஆனால் அவரோ சபாசின் சொத்துக்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் எனக் கேட்டார். இந்தச் சொத்துப் பிரச்சனையால் இவரது தாயின் சகோதரரும், தந்தையின் சகோதரரும் வழக்குத் தொடர்ந்தனர். பகைமை வளர்ந்தது. இது சபாசை அதிகம் பாதித்தது. தனக்குச் சொத்துக்களே தேவையில்லை என ஒரு துறவு மடத்தில் சேர்ந்தார் சபாஸ். சில ஆண்டுகள் கழித்து இவரின் இரு உறவினர்களும் மனமாறி சபாசிடம் வந்து ஊருக்குத் திரும்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். ஆனால் சபாஸ் வீடு திரும்பவேயில்லை. 532ம் ஆண்டில் 94வது வயதில் இறந்த புனித சபாஸ் மிகப் பெரிய பாலஸ்தீனிய ஆதீனத் தலைவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.