2014-06-05 16:52:52

திருத்தந்தை பிரான்சிஸ் : நாடோடி இனத்தவர் பொது நலனுக்கு உதவுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்


ஜூன்,05,2014. நாடோடி இனத்தவர் பொது நலனுக்கு உதவுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று, நாடோடி இனத்தவர்க்குப் பணிசெய்யும் ஆயர்கள் மற்றும் தேசிய இயக்குனர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“திருஅவையும் நாடோடி இனத்தவரும் : எல்லைப்பகுதிகளில் நற்செய்தி அறிவிக்க…” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று வத்திக்கானில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கியுள்ள பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
நாடோடி இனத்தவர் சமூகத்தில் அடிக்கடி ஓரங்கட்டப்படுகின்றனர், சிலவேளைகளில் வெறுப்போடும், சந்தேகத்தோடும் நோக்கப்படுகின்றனர்; அவர்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புகளில் உறுதியுடன் ஈடுபடுவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.
இது ஒரு சிக்கலான உண்மை என்பதை நாம் அறிந்துள்ளோம், எனினும், நாடோடி இனத்தவர் பொது நலனுக்கு உதவுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர், அம்மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் ஊக்குவித்து, அவர்களுக்குரிய வழிகளை பொறுப்புடணர்வுடன் பகிர்வதன்மூலம் இதனச் செயல்படுத்த முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த இனத்தவர் மத்தியில் நிலவும் வறுமையையும், கல்வி வாய்ப்பின்மை, நலவாழ்வு வசதிகள், தரமான குடியிருப்பு வசதிகள், தொழில் வாய்ப்பின்மை போன்றவை இல்லாமையையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருஅவை இம்மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இம்மக்கள் மத்தியில் பணிபுரியும் மேய்ப்புப்பணியாளர்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு இவ்வெள்ளியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.