2014-06-04 15:11:30

புனிதரும் மனிதரே : சிறார் மாண்பைக் காக்க உயிர் துறந்தவர்(St. Charles Lwanga and Companions)


19ம் நூற்றாண்டில் உகாண்டாவை ஆட்சிசெய்த Mwanga என்ற அரசர் ஊழல் நிறைந்தவர். சிறாரையும் இளையோரையும் தனது பாலியல் இன்பத்துக்காகப் பயன்படுத்துபவர். அரசரின் நண்பரும் அவரது அரசவையில் முக்கிய பதவி வகித்தவருமான Joseph Mukasa என்ற கத்தோலிக்கர், அரசர் சிறாரைத் தனது பாலியல் இன்பத்துக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்தார், அரசரின் பிற அநியாயங்களுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவரைச் சந்திக்க வந்த ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஆயரை அரசர் கொன்றுபோட்டதையும் கண்டித்தார். இதனால் ஜோசப் தனது நண்பர் என்றுகூட பார்க்காமல், 1885ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அவரைத் தலைவெட்டிக் கொன்று போட்டார் அரசர். ஜோசப் இறந்ததும் அக்கிறிஸ்தவ சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை 25 வயதான Charles Lwanga எடுத்துக்கொண்டார். இவரும் சிறாருக்கு மறைக்கல்வி போதித்து, அவர்களை அரசரின் பாலியல் பயன்பாட்டிலிருந்து காப்பாற்றினார். இதையறிந்த அரசர் தனது அரசவையிலிருந்த 15 கிறிஸ்தவர்களைப் பிரித்தான். இவர்கள் 13க்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களை Namugongo என்ற இடத்துக்கு 2 நாள்கள் நடக்க வைத்து அங்கு உயிரோடு எரித்துக் கொன்றார். இவர்களில் மூத்தவராக இருந்த Matthias Kalemba என்பவர் போகும் வழியில் கடவுள் எங்களைக் காப்பாற்றுவார், அவர் எங்களது ஆன்மாவை எடுத்துக்கொள்வார் என்று சொன்னதும், கொலைகாரர்கள் அவரை, துண்டம் துண்டமாக வெட்டி வழியிலே போட்டுவிட்டனர். மற்றவர்கள் உரிய இடத்துக்குச் சென்றபோது 7 நாள்கள் கட்டி வைக்கப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டனர். ஆனால் Charles Lwangaஐ மட்டும் 1886ம் ஆண்டு ஜீன் 3ம் தேதி அவர்களிடமிருந்து தனியாக பிரித்து பாதத்திலிருந்து ஒவ்வொரு பாகமாக எரித்தனர். சார்லசின் உயிர் கொஞ்சம் இருந்தபோது கொலைகாரர்கள் அவரிடம், நீ இப்போது உனது விசுவாசத்தை மறுதலித்தால் விடுதலைசெய்யப்படுவாய் என்று கூறினர். ஆனால் சார்லஸ் உறுதியாக இருந்தார். மொத்தம் 22 பேர் எரித்துக் கொலைசெய்யப்பட்டனர். அச்சமயத்தில் இவர்கள் இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தனர். புனித Charles Lwanga ஆப்ரிக்க கத்தோலிக்க இளையோர் இயக்கத்துக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.